மாமன் படம் வெற்றிபெற ’மண் சோறு’ சாப்பிட்ட ரசிகர்கள் : திட்டித் தீர்த்த சூரி

Published On:

| By christopher

soori angry towads his fans who eat rice from sand

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான மாமன் திரைப்படம் இன்று (மே 16) உலகம் முழுவதும் ரிலீசானது. soori angry towads his fans who eat rice from sand

வெற்றிமாறனின் விடுதலை, விடுதலை 2 படத்தைத் தொடர்ந்து, கருடன் திரைப்படத்தில் கமர்ஷியல் ஹீரோவாகவும் பலரையும் அசர வைத்தார் சூரி.

இதனையடுத்து அவரது நடிப்பில் உருவாகி வந்த மாமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இப்பட ப்ரோமோசன் நிகழ்ச்சிகளில் சூரியின் பேச்சு பலரின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில் இன்று ரிலீசான மாமன் படம் வெற்றி பெற வேண்டி சூரியின் சொந்த ஊரான மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டனர்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலவிதமான விமர்சனங்களும் எழுந்தன.

மேலும் இன்று காலை ரசிகர்களுடன் சென்னை கமலா திரையரங்கில் படம் பார்த்த சூரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மாமன் படம் வெற்றி பெற ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டது குறித்து பெரும் அதிருப்தி தெரிவித்து சூரி பேசியது சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

சூரி பேசுகையில், ”மாமன் படம் வெற்றியடைய வேண்டும் என்று சொல்லி மதுரையில் மண் சோறு சாப்பிட்டுள்ளார்கள். அவர்களை அன்பு தம்பிகள் என்று சொல்வதற்கே வருத்தமாக உள்ளது.

இது ரொம்ப முட்டாள் தனமானது தம்பிகளா.. படம் நல்லா ஓடணும், என் கவனத்தை பெறனும்னு இந்த மாறி செய்கிறீர்கள். எனக்கு இது புரியவில்லை.

படமும், கதையும் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி அடையும். அதை விட்டு விட்டு மண் சோறு சாப்பிட்டால், படம் எப்படியிருந்தாலும் ஓடிடுமா என்ன?

இந்த சம்பவம் மிகவும் வேதனையாக உள்ளது. அந்த பணத்தில் நான்கு பேருக்கு உணவு, தண்ணீர், மோர் வாங்கி கொடுத்து இருக்கலாம். இது போன்ற செயல்களை செய்பவர்கள் என்னுடைய தம்பிகளாக ரசிகர்களாக இருப்பதற்கு தகுதி அற்றவர்கள். நான் சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துருக்கேன். அப்படி இருக்கும்போது அதை மதிக்காமல் நீங்கள் இப்படி செய்தது ரொம்ப முட்டாள்தனமானது” என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் நடிகர் சூரி.

எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி, ரஜினி, அஜித் விஜய் என தற்போது வரை தங்களது அபிமான பிரபலத்தின் படம் ஓடுவதற்காக பால் அபிஷேகம், மண்சோறு என ரசிகர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதனை நடிகர் சூரி வெளிப்படையாக கண்டித்து பேசியிருப்பது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share