மாமியாரை வெட்டிய மருமகன்! விடுதலை செய்த நீதிமன்றம்!

தமிழகம்

சேலத்தில் மாமியாரை மருமகன் வெட்டிய வழக்கில், இருவரும் சமரசமாய் சென்றதையடுத்து, மருமகனை விடுதலை செய்தது உயர் நீதிமன்றம்.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, கடன் பிரச்சினை தொடர்பாக, சிவசுப்பிரமணிக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மகளுக்கு ஆதரவாக மாமியாரும் பேசியதையடுத்து, இதில் கோபமடைந்திருக்கிறார் சிவசுப்பிரமணி. இதனால், தன் மாமியாரின் முதுகில் அரிவாள்மனையைக் கொண்டு வெட்டியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த மாமியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிவசுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த சேலம் மகளிர் நீதிமன்றம், 2022 மே மாதம் 25ம் தேதி, சிவசுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிவசுப்பிரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு ஜூலை 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசுப்பிரமணி சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் பாயின்ட் பாலாஜி, “இந்த வழக்கில் மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகியுள்ளனர். எனவே, மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். மாமியாரும், மனுதாரரின் மனைவியும் குழந்தைகளும் வந்துள்ளனர்” என்றார். சிவசுப்பிரமணியன், அவரது மாமியார், 3 குழந்தைகளுடன் மனைவி ஆகியோர் ஆஜராகினர். அப்போது மாமியார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தனது மகள், மருமகனுடன் வாழ வேண்டும். 3 குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால் என்னை வெட்டிய மருமகனை மன்னித்து விட்டேன். எங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டது. அதனால் மருமகனை விடுதலை செய்யுங்கள்” என்று தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நேற்று (ஜூலை 21) அளித்த தீர்ப்பில், “கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டால், அதை ஏற்று சட்டப்பிரிவு 482இன் கீழ் வழக்கை ரத்து செய்யலாம் என ஹரியானாவைச் சேர்ந்த ஜோஷி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி தண்டனையையும் ரத்து செய்யலாம். கணவன் மனைவி இருவருக்குமிடையே இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனர். எனவே, இந்த உயர் நீதிமன்றத்துக்கு தரப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சிவசுப்பிரமணிக்கு கீழ்கோர்ட் வழங்கிய சிறைத்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மேலும், மனுதாரரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது” என கூறினார்.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.