48 வருடத்தில் நடக்காதது ஒன்று இப்போது நடந்துள்ளது. புத்தகக் காட்சிக்கு விருந்தினராக வந்த சீமான் எப்படி இதை செய்யலாம்? அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பபாசி தலைவர் சொக்கலிங்கம் இன்று (ஜனவரி 6) தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் கடந்த 4ஆம் தேதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற நூலை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது சர்ச்சையானது.
மேலும் அப்போது பேசிய சீமான் புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெயர்கள் குறித்து பேசுகையில், பெரியார் மற்றும் முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சீமானின் பேச்சுக்கும், புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.
48 வருடத்தில் நடக்காத ஒன்று!
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பபாசி தலைவர் சொக்கலிங்கம் கூறுகையில், “பபாசி தலைவர் என்ற முறையில் சீமான் மேடை ஏறுவதற்கு முன்பாக அவரிடம், ’இது அரசியல் மேடை அல்ல, இலக்கிய மேடை, புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேச வேண்டும்’ என அறிவுறுத்தினேன். சீமானின் பேச்சுக்கு பபாசி கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது.
வரும் காலங்களில் புத்தக வெளியீடுகளின் கட்டுப்பாடுகளை வரையறை செய்வோம். சீமானுக்கு கொள்கைகள் இருக்கும் ஆனால், இது பொதுவான மேடை இங்கு பேசியதுதான் சிக்கல். 48 வருடத்தில் நடக்காதது ஒன்று இப்போது நடந்துள்ளது. புத்தகக் காட்சிக்கு விருந்தினராக வந்த சீமான் எப்படி இதை செய்யலாம்? அவருடைய கண்ணியத்தை காக்கத் தவறிவிட்டார். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சொக்கலிங்கம் தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்!
பபாசி பொதுச் செயலாளர் முருகன் அளித்த பேட்டியில், “சீமான் வெளியிட்ட புத்தகத்தின் பதிப்பாளாரிடம், ’ பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பபாசி அமைப்பில் உறுப்பினராக ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். அதனால் நிகழ்ச்சிக்கு வரும் சீமான் அரசியல் பேச கூடாது, தவறான தகவல்களை பகிர கூடாது’ என்று முன்னரே அறிவுறுத்தியிருந்தோம். அதனை அந்த பதிப்பாளரும் ஏற்று கொண்டார்.
அதன்படி சிறப்பு விருந்தினராக வந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். புத்தக காட்சி பாதைக்கு நாங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் வைப்போம். அவர் ஒன்றும் பபாசியின் உறுப்பினர் கிடையாது.
முதல்வர் ஸ்டாலினை அவமரியாதையாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிவுசார் உலகத்தில் வந்து, வாய்க்கு வந்ததை உளறிட்டு போவது எந்த விதத்தில் நியாயம்? இந்த விவகாரத்தில் சீமான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை இதனை விடமாட்டோம்” இவ்வாறு முருகன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா