சோலார் உற்பத்தி மூலமாக இந்தியாவில் அத்துறையில் 43,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம் உயர்திறன் கொண்ட சோலார் PV மாட்யூல்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அக்டோபர் மாதத்துக்குள் நாடு முழுவதும் சுமார் 43,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 11,220 நேரடி வேலைவாய்ப்புகள் அடங்கும் என்று லோக்சபாவில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளை அமைக்கும் சோலார் உற்பத்தியாளர்கள் வழங்கிய தகவல்களின்படி, குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசா ஆகிய ஒன்பது மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், உள்நாட்டு சோலார் PV மாட்யூல் உற்பத்தியை ஊக்குவிப்பதாகும். இதன் மூலம், வெளிநாட்டு இறக்குமதியை குறைத்து, தன்னிறைவு அடைவதோடு, வேலைவாய்ப்பையும் உருவாக்குவதாகும்.
இந்தத் திட்டத்திற்காக 24,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், 48.3 GW அளவுக்கு சோலார் மாட்யூல் உற்பத்தி அலகுகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் இந்தத் திட்டத்தால் அதிகம் பயனடைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களின் பெரிய திட்டங்கள் மூலம் 22,400க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் அங்கு உருவாகியுள்ளன.
அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் எஃப்எஸ் இந்தியா சோலார் வென்ச்சர்ஸ், விஎஸ்எல் கிரீன் பவர், டிபி சோலார் போன்ற நிறுவனங்கள் சுமார் 6,800 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. அதேபோல், ஆந்திரப் பிரதேசம் இரண்டு சோலார் உற்பத்தி அலகுகள் மூலம் 1,620 வேலைவாய்ப்புகளையும், ஒடிசா ஆம்பின் சோலார் நிறுவனத்தின் மூலம் 200 வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளன. ரீநியூ ஃபோட்டோவோல்டாயிக்ஸ், க்ரூ எனர்ஜி, அவாடா எலக்ட்ரோ போன்ற பல நிறுவனங்கள் பல மாநிலங்களில் திட்டங்களை செயல்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
இந்தியாவின் சோலார் PV மாட்யூல் உற்பத்தித் திறன் தற்போது 121.68 GW ஆக உள்ளது. இது நவம்பர் 25 அன்று வெளியிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாடல்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பட்டியலில் (ALMM) தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் (செப்டம்பர் 2025 வரை), இந்தியா 180.58 லட்சம் சோலார் PV மாட்யூல்களை 386.33 மில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்துள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியிலும் இறக்குமதி தொடர்ந்து வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.
உலக சோலார் PV விநியோகச் சங்கிலியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. பாலிசிலிக்கான் மற்றும் வேஃபர் உற்பத்தியில் 90%க்கும் அதிகமாகவும், சோலார் செல்கள் உற்பத்தியில் 85%க்கும் அதிகமாகவும், மாட்யூல்கள் உற்பத்தியில் கிட்டத்தட்ட 80%க்கும் அதிகமாகவும் சீனா பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
