Crazxy : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

sohum shah crazxy movie review

பரபரப்பை தருகிறதா இந்த ‘த்ரில்லர்’?

சுனில் தத் நடிப்பில் வெளியான ‘யாதேன்’ திரைப்படம் 1964இல் வெளியானது. கலாபவன் மணி நடித்த ’தி கார்டு’ 2001இல் வெளியானது. கன்னட நடிகை பாவனா நடிப்பில் ‘சாந்தி’ திரைப்படம் 2005இல் வெளியானது. இந்தப் படங்களுக்கெல்லாம் உள்ள ஒற்றுமை என்ன? பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்கும் இப்படங்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால், அது தானாகப் புரிய வரும். sohum shah crazxy movie review

ஆம், இவையனைத்தும் ஒரே ஒரு நடிகர் அல்லது நடிகை இடம்பெற்ற திரைப்படங்கள். இந்த பாணியில், மிகக்குறைவான நடிகர் நடிகைகளை வைத்துப் படங்கள் தயாரிக்கிற வழக்கம் உலகம் முழுக்க இருக்கிறது.

அந்த வரிசையில், சோஹம் ஷா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகியிருக்கிற திரைப்படம் ‘Crazxy’. கிரிஷ் கோஹ்லி இதனை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எத்தகையதாக உள்ளது?

ஒரு ‘தேடல்’ பயணம்! sohum shah crazxy movie review

ஒரு மருத்துவர் தான் செய்த தவறை மூடி மறைப்பதற்காக, ‘பணம்’ கொடுத்து எதிர்தரப்பை அமுக்கப் பார்க்கிறார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகையில், அவரது குணாதிசயங்கள் மூர்க்கமானதாக, அலட்சியம் நிறைந்ததாக, சக மனிதர்களால் சகித்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

பயணம் தொடங்கியதுமே, அவருக்கு முன்பின் அறிமுகமில்லாத நபரிடம் இருந்து ஒரு ‘அழைப்பு’ வருகிறது. ‘உங்க குழந்தைய நான் கடத்தி வச்சிருக்கேன்’ என்கிறார் அந்த நபர். அந்த மருத்துவர் அதனைக் கேட்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

அடுத்தடுத்த முறை போன் செய்கிறார் அந்த நபர். அவரது பேச்சு, அந்த மருத்துவரைத் துணுக்குறச் செய்கிறது.

உடனே அந்த விஷயத்தைத் தனது முன்னாள் மனைவியிடம் சொல்கிறார்; இப்போது தன்னுடன் காதல் உறவில் இருக்கும் பெண்ணிடம் சொல்கிறார். இருவரிடமும் ‘இதனை போலீஸிடம் சொல்லிவிட வேண்டாம்’ என்கிறார். அதனை மீறி, அவரது மனைவி போலீசாரிடம் விஷயத்தைச் சொல்லிவிடுகிறார்.  

அதேநேரத்தில், பிறந்தது முதல் கடந்த நொடி வரை மகள் மீது துளியும் பாசம் இல்லாதவராகவே இருக்கிறார் அந்த மருத்துவர். சொல்லப்போனால், டவுன் சிண்ட்ரொமினால் பாதிக்கப்பட்ட தனது குழந்தையை ‘முட்டாள்’ என்றே நினைத்து வருகிறார்.

அப்படிப்பட்ட ஒரு மனிதர், மகளைக் கடத்தியவரிடம் 5 கோடி ரூபாயைத் தர ஒப்புக்கொள்கிறார். அது எப்படி நிகழ்ந்தது? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இதற்கு நடுவே பஞ்சாயத்து பேசிய கும்பல் ஒரு பக்கம், கடத்தல்காரர் ஒருபக்கம், அந்த நபரின் மனைவி முதல் இதர நபர்கள் இன்னொரு பக்கம் என்று ஆளாளுக்கு அவருக்கு போன் செய்கின்றனர். அதற்கு நடுவே சாலையில் ‘ஜெட்’ வேகத்தில் தனது காரை அவர் இயக்குவது ‘தனி ட்ராக்கில்’ நிகழ்கிறது.

மொத்தப்படமும் நாயகனின் ஒரு ‘தேடல்’ பயணம் ஆக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அபிமன்யூ எனும் அப்பாத்திரம் மட்டுமே இத்திரைக்கதையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. அவரது மகளாகக் காட்டப்படும் வேதிகா எனும் பாத்திரம் இரண்டொரு ஷாட்களில் வந்து போயிருக்கிறது.

மற்றபடி இதர பாத்திரங்கள் அனைத்துமே புகைப்படங்களாகவும் தொலைபேசியின் வழியே ஒலிக்கும் குரலாகவும் நம்மை வந்தடைகின்றன. அதுவே இப்படத்தின் சிறப்பு.

சுயநலம் கரைந்துபோகிற கதை! sohum shah crazxy movie review

தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திச் சிந்திக்கிற நாயகனாக, இப்படத்தில் நடித்திருக்கிறார் சோஹம் ஷா. நாற்பதைக் கடந்த தோற்றத்தோடு இருந்தாலும், இத்திரைக்கதையில் ‘ஹீரோயிசத்தை’ வெளிப்படுகிற காட்சிகளும் அவருக்கிருக்கின்றன.

அவரோடு உரையாடுகிறவர்களாக டினு ஆனந்த், நிமிஷா சஜயன், ஷில்பா சுக்லாவின் குரல்கள் ஒலிக்கின்றன.

மையப் பாத்திரத்தின் சுயநலம் எந்த நொடியில் கரைகிறது, எப்போது முதல் தனது குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறார் என்பதைக் கண்டறியும் அளவுக்கு, இதன் திரைக்கதை நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

படம் தொடங்கிப் பத்தாவது நிமிடத்தில் திரையில் தென்படுகிற பரபரப்பு இறுதி வரை தொடர, ஒளிப்பதிவாளர்கள் சுனில் போர்கர், குல்தீப் மமானியா ஆகியோரது அபாரமான உழைப்பு மிகப்பெரிய அளவில் பங்களித்திருக்கிறது.

போலவே, படத்தொகுப்பாளர்கள் சன்யுக்தா காஸா, ரிதம் லேத் இருவரும் திரைக்கதையில் நிறைந்திருக்கும் ‘டெம்போ’ குறையாமல் ஷாட்களை அடுக்கியிருக்கின்றனர். அந்த செயல்பாட்டின் அடித்தளத்தில் ஒரு ‘சீர்மை’ இருப்பதைக் காண முடியும்.

ஒலி வடிவமைப்பாளர் குணால் ஷரம், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஷீத்தல் மற்றும் அமித் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

அதனை மிகச்சரியாக ஒருங்கிணைத்து, சுமார் 93 நிமிடங்கள் ஓடுகிற ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார் கிரிஷ் கோஹ்லி.

இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ் தந்திருக்கும் மூன்று பாடல்களுமே வழக்கத்தை உடைத்தெறிகிற ரகம். இதுபோகப்பழைய ஹிந்திப் பட பாடல்கள் சில பின்னணியில் ஒலிக்கின்றன.

பின்னணி இசையை அமைத்திருப்பவர் ஜெஸ்பர் கிட். சின்னச் சின்ன ஒலிகள், காதைப் பிளக்கும் கிளாசிக் பட பாடல்களுக்கு நடுவே, அவற்றோடு பொருந்துகிற வகையிலும் காட்சிக்கு ஏற்றவாறும் அவர் தனது இசையைத் தந்திருக்கிறார்.

மிகச்சிறிய கதையை எடுத்துக்கொண்டு, அதனை உருட்டித் திரட்டி திரைக்கதையாக்கி, அதற்கு காட்சியாக்கம் அமைத்த வகையில் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குனர் கிரிஷ் கோஹ்லி.

மொத்தப்படத்தின் ஆக்கத்திற்கும் ஏற்றவாறு இதன் கிளைமேக்ஸ் இல்லை. அதுவே இப்படத்தின் பெருங்குறை.

ஒருவேளை கிளைமேக்ஸை யோசித்துவிட்டு திரைக்கதையை ஆக்கியிருந்தால், இப்படம் வேறுமாதிரியான அனுபவத்தைத் தந்திருக்கக்கூடும்.

இவ்விரண்டையும் சீர் தூக்கிப் பார்க்கிற அனுபவத்தைப் படக்குழு பெறுமானால், அடுத்த படத்தை இன்னும் சிறப்பானதாகத் தருவதென்பது நிச்சயம்.

மிக முக்கியமாக, இதர பாத்திரங்களின் உணர்வுகளை வெறுமனே குரல் வழியே பெறும் வகையில் இதன் எழுத்தாக்கமும் காட்சியக்கமும் இருக்கின்றன.

முகங்களைப் பளிச்சென்று காட்டியபிறகு திரையைத் தாண்டி உறவு பாராட்டாத கதைகளுக்கு நடுவே, ஒரு பிணைப்பை உடனடியாக உருவாக்கி இறுதி வரை காக்கிறது இப்படம். அதுவே இதன் யுஎஸ்பி.

அதனை ரசிக்க விரும்புபவர்கள் மட்டும் இப்பரிசோதனை முயற்சியைக் காணலாம், மகிழலாம், பாராட்டவோ அல்லது திட்டவோ முயலலாம்! sohum shah crazxy movie review

உதயசங்கரன் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share