“செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, நேற்று (ஜூலை 28) சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தொடங்கியது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு கவனித்துவரும் வேளையில், இதன் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என விமர்சனங்களும் எழுந்தன. என்றாலும் பிஜேபியினர் அந்த விளம்பரங்களில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் மோடி படத்தையும் இணைத்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் சிலர் கருப்பு மையைத் தடவி இழிவுப்படுத்தினர். இந்த வீடியோ வைரலானதால் பலரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில், பிரதமர் மோடி படத்தை வைக்க கோரி ராஜேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்திற்காகப் பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தைத் தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளது.
மேலும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்குப் பெருமை சேர்க்கக்கூடிய இந்த நிகழ்வினை ஆளும் கட்சி தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாகப் பயன்படுத்திக்கொண்டது. செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில், இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இது சட்டவிரோதமானது. ஆகவே, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (ஜூலை 28) தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் அணில் காணொலி வழியாக ஆஜராகினார். “பிரதமர், குடியரசுத் தலைவர் புகைப்படத்தை இத்தகைய நிகழ்வில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு தமிழக அரசுத்தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும்” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு அரசுத் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “பிரதமர் வருகை 22ஆம் தேதிதான் உறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது என்றும் அதனைத் தொடர்ந்து பிரதமரின் படம் 44வது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் சேர்க்கப்பட்டு, இன்றைய (ஜூலை 28) நாளிதழ்களில்கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது” எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி
அப்போது, “குடியரசுத் தலைவரும், பிரதமரும் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அவர்கள், “100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். முதலில் இது நமது தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வு. தேசம் குடியரசுத்தலைவர், பிரதமரின் கீழ் நிர்வகிக்கப்படும் சூழலில், இது போன்ற சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும்” எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கைத் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.
பின்னர் நேற்று பிற்பகலே இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, “நீதிமன்றம் உச்சநீதிமன்றம் ஏற்கனவே சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும். அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் விளக்கங்கள் ஏற்கத்தக்கவை அல்ல, செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், “குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெ.பிரகாஷ்