“ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு இன்னும் தயங்குவது ஏன்” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று ஆன்லைனில் ரம்மி விளையாடி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பவானி என்ற பெண், கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், அங்குள்ள தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்த பிரபு, ஒருகட்டத்தில் அதற்கு அடிமையும் ஆகியுள்ளார். இதனால் ரூ.15 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை இழந்துள்ளார். கேரளா லாட்டரியில் விழுந்த ரூ.3 லட்சத்தையும் இழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர் தனது சொந்த வீட்டை விற்க முயற்சித்து அதில் பெறப்பட்ட அட்வான்ஸ் பணத்தை ஆன்லைன் ரம்மியில் விளையாடுவதற்கு பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. இதில் ஏமாற்றம் அடைந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான பிரபு, இன்று (ஜூலை 28) அவருடைய வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழக அரசு தயங்குவது ஏன்?
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என பல கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றன. இதில் பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதன் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், ஆன்லைன் குறித்த விழிப்புணர்வு பதிவுகளை அடிக்கடி எழுதுவதுடன், தமிழக அரசுக்கும் இதைத் தடை செய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்துவருகிறார். அதேபோல் அவர், இன்று (ஜூலை 28) பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், தற்கொலை செய்துகொண்ட பிரபு குடும்பத்துக்கு அனுதாபத்தைச் சொல்லியிருப்பதுடன், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டுவர முடியாது என்பதற்கு பிரபுவின் கதையும் ஓர் உதாரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27வது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என அரசு அறிவித்த பிறகு, நிகழ்ந்த 4வது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு இன்னும் தயங்குவது ஏன்? ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் ஓர் உயிர்கூட பறிபோகக் கூடாது. வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதியுடன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்