நிவேதிதா லூயிஸ்
இசையும் நாட்டியமும் ‘எங்களவாவுக்குத்தான்’ – சமகாலப் பார்ப்பனப் பெண் கலைஞர்கள் தற்போது உயர்த்திப் பிடித்திருக்கும் அறைகூவல் இது. டி.எம். கிருஷ்ணா என்ற பார்ப்பன இசைக் கலைஞருக்கு சங்கீத அகாதமி ‘சங்கீத கலாநிதி’ விருது அளிப்பதாக அறிவித்ததும் முணுமுணுப்பு தொடங்கியது. ‘குப்பத்துக்கு கர்நாடக இசையைக் கொண்டு செல்கிறேன்’ என அவர் முன்னெடுத்த ஊரூர் – ஆல்காட் குப்பம் விழாவும் ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என பிலஹரியிலும் ‘சலாதுல்லா சலாமுல்லா’ என ஆனந்த பைரவியிலும் கிருஷ்ணா ஆலாபனை செய்துப் பாடியதும் பன்னெடுங்காலமாய் இங்கே நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது.
பார்ப்பனீயம் மிக நுட்பமானது. இம்முறை கிருஷ்ணா பேசும் ‘புரட்சி’க்கு எதிராக ‘பெண்களை’ அது கருவிகளாக மாற்றியது. ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் முதல் போர்க்கொடியை உயர்த்தினார்கள். கிருஷ்ணாவின் இசை மேதைமைக்கு அறிவிக்கப்பட்ட விருதுதான் சங்கீத கலாநிதியே அன்றி அவரது ‘பிற சமூகம் சார் பணிகளுக்கு’ அல்ல என்பதை சங்கீத அகாதமியும் தெளிவுபடுத்திவிட்டது. ஆனாலும், கர்நாடக இசையின் ‘புனிதத்தை’ கிருஷ்ணா கெடுத்துவிட்டதாகச் சொன்னார்கள் ரஞ்சனி – காயத்ரி.
‘அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே மகிழ்ச்சியுடன் இந்த (பார்ப்பன) சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார். இசையில் ஆன்மீகத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் அவரது செயல்கள், கர்நாடக இசைக்கலைஞர்களை அவமானத்தில் தள்ளின.’ இதை வாசிக்கும்போது, இவர்கள் குறிப்பிடும் ‘சேதம்’ என்பது, இசையை மக்கள்மையப்படுத்தியது என்றே நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ‘ஆன்மீகம்’ என இவர்கள் குறிப்பது ‘பக்தி’யே அன்றி வேறில்லை.
வர்ணாசிரமத்தை நம்முள் புகுத்திய பார்ப்பனியம், பார்ப்பனர்களை அத்தர்மத்தின் உச்சியில் அமர்த்தியது. ‘பார்ப்பனர்கள் பேசும் ‘சரியான செய்கை’ (orthopraxy) ‘தூய்மையான மனிதன்’ மட்டுமே உயர்ந்த கடவுளை நெருங்கமுடியும் எனச் சொல்கிறது’ என்கிறார் ஆய்வாளர் எட்வர்ட் ஹார்பர் (Ritual Pollution as an Integrator of Caste and Religion, Edward B. Harper, The Journal of Asian Studies, Vol 23, Aspects of Religion in South India, 1964). பார்ப்பனர்களைத் தவிர, பார்ப்பனீயத்தைத் தவிர உலகில் உள்ள எல்லா விஷயங்களும் ‘தீட்டானவை’ என்னும் எண்ணம் இன்றும் பார்ப்பன வீடுகளில், அவர்களது ஏஜண்டுகளாகச் செயல்படும் பெண்களிடமும் குழந்தைகளிடமும் விதைக்கப்பட்டு வருகிறது.
இதே பார்ப்பனீயம் கர்நாடக இசையிலும் நாட்டியத்திலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இசை வேளாளர் மரபைச் சார்ந்த கலைஞர்களிடம் இருந்த செவ்வியல் இசை, சதிர் ஆட்டம் இரண்டையுமே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கபளீகரம் செய்து கவர்ந்து கொண்டவர்கள் வசதியாக வாழ்ந்த பார்ப்பன இனப் பெண்கள். நாயக்கர் காலத்தில் மோகத்தையும் காதலையும் முன்னிறுத்தி ஆடியும் பாடியும் வந்த இசை நாட்டியக் கலைஞர்கள், தங்கள் இயலாமை, ஏழ்மை காரணமாகவும், இசை வேளாளர் ஆண்கள் அதுகாறும் தாங்கள் அனுபவித்துவந்த அவப்பெயருக்கு மாற்றாகவும் கலைகளை பார்ப்பனர்களுக்குத் தாரை வார்த்தனர். இதில் இசை வேளாளர் பெண்களுடைய தன்னிறைவு, விடுதலை எல்லாமே அடிபட்டுப் போனது வரலாற்று சோகம்.
அப்படிக் கபளீகரம் செய்துகொண்ட கலைகளை ‘சிருங்காரம்’ இல்லாமல் ‘பக்தி’யை மட்டுமே நோக்கிய குவிப்பாக இருத்தல்வேண்டும் என மாற்றியது பார்ப்பனீயம். பாலசரசுவதி போன்ற தேர்ந்த இசை வேளாளர் பெண்களின் சதிர், ருக்மணிதேவி போன்ற மேல்தட்டுப் பார்ப்பனப் பெண்களின் இயந்திரத்தனமான நாட்டியமாக உருமாறியது. ஆனால் எண்பதுகள் தொண்ணூறுகளில் இந்த நிலை சற்றே மாறி, இன்று நாட்டிய உலகில் எல்லா சாதியினரும் புழங்கும், ஆடும் நிலை ஏற்பட்டுள்ளது எனலாம். இதற்கு சினிமா உலகமும் ஒரு மறைமுகக் காரணம். தங்கள் குடும்பப் பெண்கள் தவிர இன்னபிற பெண்களுக்கு நாட்டியத்தைப் பயிற்றுவிக்க இசை வேளாளர் ஆண்களுக்கு எந்த மனத்தடையும் இருக்கவில்லை. நாட்டியத்தின் மேலுள்ள மோகம், இடைநிலை சாதியினரையும் பீடித்து, இன்று ஓரளவுக்கேனும் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கர்நாடக இசையுலகம் எவ்விதத்திலும் இப்படியான மாற்றத்துக்கு உள்ளாகவில்லை. ஆபிரகாம் பண்டிதர், ஷேக் சின்ன மௌலானா, மம்முது (ஆய்வாளர்) என பிற மதத்தவர் இத்துறையில் இயங்கினாலும், பெருவாரியாக பார்ப்பனர்களின் கோட்டையாகவே கர்நாடக இசை இருக்கிறது. இந்த ‘பார்ப்பன மேலாதிக்கம்’ பார்ப்பனப் பெண்களுக்கே எதிராகத் திரும்பியதையும் நாம் பார்த்தோம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘மீ டூ’ போராட்டம் வெடித்தபோது, வேறெந்தத் துறையையும்விட கர்நாடக இசைத்துறையில் பார்ப்பன ஆண்கள் ஆடிய ஆட்டம்தான் அதிகம் என சின்னஞ்சிறு பெண்கள் இணையவெளியில் காறித் துப்பினார்கள். அப்போது இதே ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் ‘திறந்த கடிதம்’ ஒன்றைக் கையெழுத்திட்டதுடன் தங்கள் கடமை முடிந்தது என்று கைகட்டி உட்கார்ந்துகொண்டார்கள். கிருஷ்ணாவோ, தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் பேசிவந்தார்; குறைந்தபட்சம் சங்கீத அகாதமி மீ டூவில் குற்றம் சாட்டப்பட்ட பாலியல் குற்றவாளிகளுக்கு அகாதமி தன் மேடையைத் தரக்கூடாது எனத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார்.
சொந்த சாதியில் தங்கள் பெண்களுக்கே நடந்த அநியாயத்தை வெகு லகுவாகக் கடந்துசெல்லும் அளவுக்குத்தான் இந்தப் பார்ப்பனப் பெண்களுக்கு அறமிருக்கிறது. ரஞ்சனி காயத்ரியின் பொருமல், பெரியாரையும் விட்டுவைக்கவில்லை. பார்ப்பன இன அழிப்புக்கு அறைகூவல்விட்ட பெரியாரைக் குறித்து கிருஷ்ணா பாடினார் எனக் குற்றம் சாட்டினர்.
எத்தனை முறையோ விளக்கம் கொடுத்தாயிற்று – பெரியார் இவ்வாறு ஒருபோதும் சொன்னதில்லை என! ஆனாலும் சராசரி வாடஸ்அப் பல்கலைக்கழகம் தரும் ‘அறிவு’தான் சங்கீத மேதைகளுக்கு இருக்கிறது என்பதும், அதைப் பகுத்தாராயும் பகுத்தறிவுகூட இல்லாதவர்களாக ஒடுக்குமுறையில் அழுந்திக் கிடக்கின்றனர் என்பதையும் அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. ‘கற்புடைய மேல்சாதி, ‘குடும்பப் பெண்களே’ தென்னிந்தியாவின் இசையை ‘செவ்வியல்’ வடிவத்துக்கு மீட்கமுடியும் எனப் பார்ப்பனர்கள் முடிவுசெய்தனர்’ என் கிறார் ஆய்வாளர் அமாண்டா வீட்மேன்.
இந்தப் பெண்களுடைய ‘கற்பு’ என்பதுடன் முடிச்சு போடப்பட்டதால், தாங்கள் ‘தூய்மைப் படுத்தவேண்டிய’ பார்ப்பனர்களாக’ (Orthopraxy Brahmins) இப்பெண்கள் தங்களைப் பார்க்கின்றனர். கற்பு என்ற கருத்தியல் பெண்களுக்கே எதிரானது எனப் பேசிய பெரியார்மேல் பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிக்கும் பெண்களுக்கு எரிச்சல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இன்னும் ஒரு படி அதிகமாக, பாடகி சுதா ரகுநாதனின் காணொளி ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியது. ‘கர்நாடக சங்கீதம் என்பது பக்தியுடன் செய்யப்படுவது. எப்படி கருவறைக்குள் ‘பிற மக்கள்’ (others) நுழையமுடியாதோ, கூடாதோ அதேபோல கர்நாடக சங்கீதத்துக்கும் ஒரு ‘கட்- ஆஃப்’ இருக்கவேண்டும். சங்கீதம் என்பது கட்டிக் காப்பாற்ற வேண்டிய ஒரு பொக்கிஷம், அதை நீங்கள் நீர்த்துப்போகச் செய்யக்கூடாது(dilute)’ என்ற தொனியில் பேசியுள்ளார் சுதா.
கருவறை – கர்நாடக சங்கீதம் – கற்புக்கு தொடர்பு உண்டா என்றால், அதுதான் இன்றைய அத்தனை சாதியச் சிக்கல்களுக்கும் ஆணிவேர் என்பேன். இதை ஆய்வாளர் லீலா துபே சாதிக்கும் பாலினத்துக்கும் இடையிலான உறவைப் பற்றிய தனது ஆய்வில் (Caste, its twentieth century avatar, Penguin Books,1996) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் – ‘இந்து சமுதாயத்தில் சமச்சீரற்ற தன்மை ‘பிரித்தல் மற்றும் படிநிலை’ கொள்கைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உயர் சாதிப் பெண்ணின் ‘தூய்மை’ பொறாமையுடன் பாதுகாக்கப்பட, ‘ஆணாதிக்க சமுதாயத்தில் தந்தைவழி குழுவில் இடம் பெறுவது அவசியம்’ என்பது மட்டும் காரணமல்ல, ‘சாதி எல்லைப் பிரச்சனைகளும்’ (caste boundaries) இதில் அடங்கும்.’ தங்களை கட்டிப்போடவே, தங்கள் ‘கற்பு’ என்ற கற்பனைக் கருத்தாக்கத்தைக் காப்பாற்றவே இந்த ‘பிரித்தலும் படிநிலையும்’ ஏற்படுத்தப்பட்டன என்பதை இன்றளவும் பார்ப்பனப் பெண்கள், பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடிக்கும் பெண்கள் உள்வாங்கிக்கொள்ளவேயில்லை என்பது வருத்தத்துக்குரியது. இசையின் மூல சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் மட்டுமே, ‘கர்நாடக இசை பாட ‘ஞானம்’ வேண்டும்’, ‘அனுக்கிரகம் வேண்டும்’ என பல ‘வேண்டும்கள்’ இங்கே வலியுறுத்தப்படுகின்றன.
‘பார்ப்பனர்கள் எல்லோருக்கும் சுலபமான இலக்காக இருக்கிறார்கள். எங்களுக்கு வன்முறை வராது, அதனால் நாங்கள் மென்மையான இலக்குகளாக இருக்கிறோம். பார்பனர்களிடத்தில் சாதியம் இல்லை’ என ரஞ்சனி – காயத்ரி இன்னொரு காணொளியில் சொல்கின்றனர். இங்கே பார்ப்பனர்கள் எளிய இலக்காக இருக்கிறார்கள் என்பதால்தான் பார்ப்பனீயம் அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறது என்பதே உண்மை. இந்த சிக்கலில் அதிகம் பேசியவர்கள் அனைவரும் பெண்கள். அவர்களை முன்னிறுத்தியே தன் சாதித் தூய்மையை, வர்ணாசிரமப் படிநிலையை, அதைச் சொல்லும் மனு நீதியை அழுத்திப் பதிக்கப்பார்க்கிறது பார்ப்பனீயம்.
இன்னும் வீட்டைக் கழுவுவதும், துடைப்பதும், ‘ஸ்பஷ்டமாக’ வைத்துக் கொள்வதும், ‘சுத்தபத்தமாக’ இருப்பதும், வடித்துக் கொட்டுவதும் பார்ப்பன வீடுகளிலும், கண்மூடி அவர்கள் வழிநடக்கும் ஆதிக்க இடைநிலை சாதிப் பெண்களுக்கும் அது எவ்வளவு பெரிய உடல், உள்ளம் சார்ந்த ஒடுக்குமுறை என்பதையும் பெண்கள் உணர்வதில்லை. ‘செவ்வாய், வெள்ளி வீடு துடைக்கிறேன், பதினோரு மணிவரை பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல் வேலை செய்து முதுகொடிந்த பின் சாப்பிடுவேன், பூஜை செய்கிறேன், விரதம் இருக்கிறேன்’ என என்னவெல்லாமோ பார்ப்பனப் பெண்களைப் பார்த்து அப்படியே செய்யும் பிற சாதிப் பெண்கள், அதைத் தங்கள் கருப்பை மீதான ஒடுக்குமுறை என எப்போதாவது சிந்திப்பதுண்டா?
இவ்வளவு பேசும் பார்ப்பனப் பெண்கள், தங்கள் காரியம் என வரும்போது, ‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே காரியத்தில் கண்ணாயிரும்மா தாண்டவக்கோனே’ போல வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தம் பறப்பதும், தங்கள் வீட்டுப் பெண்களை வெள்ளைக்காரர்களுக்கு எந்த வலியுமின்றி திருமணம் செய்து கொடுப்பதையும் பார்த்திருக்கிறீர்கள் தானே? ஏன், இவ்வளவு தூய்மைவாதம் பேசும் சுதா ரகுநாதன் அமெரிக்கக் குடியுரிமை இருக்கும் ஒரே காரணத்தால், கருப்பின மணமகனுக்கு தன் மகளை மணமுடிக்க சம்மதித்தவர்தானே? ஆக, பணமும் சமூக அந்தஸ்துமே இங்கே பிரதானமாக இருக்கிறது. கற்பு, கர்நாடக இசை, கருவறை எல்லாமும் அங்கே விழும் சில்லறைகளைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் என்பதே திண்ணம். பணம் கொழிக்கும் எல்லா இடங்களிலும் பார்ப்பனீயம் கோலோச்ச வேண்டும் – அது ஐஐடியோ, இங்கிலாந்துப் பிரதமர் பதவியோ, அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கோ…
அக, அவாள் இசைப்பதற்கு செபாஸ்டியன் அண்டு சன்ஸ் மிருதங்கம் செய்யலாம்; ஆனால் அவாளோடு உட்கார்ந்து சரி சமமாக இசையை வாசிக்கவும், அவாளுடைய ஆத்துப் பொம்மனாட்டிகளைத் திருமணம் செய்யவும் வேண்டும் என்றால், உங்களிடம் சிறந்ததிலும் சிறந்ததாகப் பணமும், சமூக அந்தஸ்தும் இருந்தால் போதுமானது. சாதித் தூய்மைவாதம் பணத்திடமும் அந்தஸ்திடமும் மண்டியிட்டே தீரும். அந்தப் பணத்தையும், அந்தஸ்தையும் பிற சாதியினர் பெற்றுவிடவேண்டும் என்றால், பார்ப்பனீயத்தின் பிடியில் இருக்கும் இசையும், கருவறையும் அனைவருக்குமானதாக வேண்டும். கர்நாடக இசையை ஜனநாயகப் படுத்துவது, பார்ப்பனப் பெண்களுக்கும் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடிக்கும் பெண்களுக்குமே நல்லது.
ஆய்வாளர் ராபர்ட் ட்ரைவர்ஸ் (1972 – Parental Investment and Sexual Selection, January 1972, Sexual Selection and the Descent of Man) ‘பெற்றோர் முதலீடு (parental investment) என்பது தன் அடுத்த தலைமுறைக்கான பெற்றோரின் முதலீடாகும்; அடுத்த சந்ததியினர் உயிர்வாழும் வாய்ப்பு இதன்மூலம் அதிகரிக்கிறது. பெற்றோரின் இந்த முதலீட்டுத் திறனால், இனப்பெருக்கம் வெற்றி பெறுகிறது’ என வரையறுத்தார். இதன் அடிப்படையில் பல ஆய்வுகள் செய்யப்பட்டுவிட்டன; இன்றளவும் பெண்கள் தங்களுக்கான இணையைத் தேடுவதில் இந்த பெற்றோர் முதலீடு பெரும்பங்கு வகிக்கிறது என்பது நிரூபணமும் ஆகியுள்ளது. இந்த முதலீடு பணமாக மட்டுமே இருத்தல்வேண்டும் என்பதில்லை. கர்நாடக இசையாகவும் இருக்கலாம்; அதன்மூலம் கிட்டும் பணமாகவும் இருக்கலாம்; வீரியமான விந்தணுவாகவும் இருக்கலாம்.
ஆக சாதித் தூய்மையை, இசைத் தூய்மையைக் காப்பது என்பது அடிப்படையில் பெண்ணின் கருப்பைக்குள் யார் நுழைவது என்ற போராட்டமேயன்றி வேறொன்றுமில்லை. பெண்ணின் கருப்பை ஆணின் விளையாட்டுப் ‘பொருளாக’ இருக்கும் சமுதாயத்தில் கிருஷ்ணாவுக்கு எதிரான குரல்கள் பெண்களிடமிருந்தேத்தான் எழுந்தாகவேண்டும் என்பதும் யாரும் அறியாத, புரியாத புதிரல்ல. இந்தப் புதிருக்கான விடையை பார்ப்பனீயம் நன்கு அறியும். அறியாதார் – குடிசை வீட்டுக்குள் இருந்தாலும் குலப்பெருமை காக்க சொந்த தங்கையையே சாதி ஆணவப் படுகொலை செய்யும் அண்ணனும், அதற்கு ஆயுதம் வாங்கித் தரும் தந்தையும் மட்டுமே.
***
கூடுதல் சான்றுகள்:
https://research-archive.org/index.php/rars/preprint/view/468/778
https://archive.org/details/casteitstwentiet0000unse
https://www.researchgate.net/publication/288653750_Parental_Investment_and_Sexual_Selection
கட்டுரையாளர் குறிப்பு
நிவேதிதா லூயிஸ்
சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பஞ்சாப் ஜெர்ஸி போட்டுக்கொண்டு ‘பெங்களூருக்காக’ விளையாடிய… பட்டைய ‘கெளப்பும்’ மீம்ஸ்கள்!
RCB vs PBKS: ‘தூதுவன் வந்தான்’ வென்றது பெங்களூரு… கோலி கொண்டாடிய ரசிகர்கள்!
பன்னீருக்கு ஏப்ரல் 8 : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!
தமிழச்சியும் தமிழிசையும்… : கட்டியணைத்து வாழ்த்துகள் பரிமாற்றம்!
அறியாதார் – குடிசை வீட்டிலிருந்தாலும் குலப்பெறுமை காக்க தங்கையையே கொல்லும் அண்ணனும் அதற்கு ஆயுதம் வாங்கித்தரும் தந்தையுமே ….
வெகுசிறப்பு.
வெகு சிறப்பு தோழர்
நன்றி தோழர்
நன்றி தோழர்