ஸ்ரீராம் சர்மா
சன்னமான குரலுடன் ஃபோனை எடுக்கும் மாருதி சாருடன் இனி பேசவே முடியாது என்றார்கள். சுருக்கென ஒரு கணம் நெஞ்சடைத்துப் போனது !
***
தோள் வரை உரசும் பிடரி முடியும் , பாதி கன்னம் வரையில் இறங்கியிருக்கும் கற்றைக் கிருதாவுமாக மாருதி சாரை முதன் முதலில் கண்டபோது எனக்கு ஆறு வயது போல இருக்கலாம்.
அந்த நாளில், மாதத்தின் ஏதாவதொரு சனிக்கிழமையில் எனது மூத்த சகோதரன் மோகனையும் என்னையும் அழைத்துக் கொண்டு எங்கள் பெரியப்பா மகன் தியாகு அண்ணன் மாருதி சாரை காண அழைத்துப் போவது வழக்கம்.
அது, 20 X 10 போல மிகக் குறுகலானதொரு அறை. அறையெங்கும் அவரது ஓவியத்துக்காக காத்திருக்கும் புத்தகங்களும் , சுவரெங்கும் எழுதி ஒட்டப்பட்ட கதைக் குறிப்புகளுமாக இருக்க தொங்கிக் கொண்டிருக்குமொரு குண்டு பல்பின் அடியில் மேல் சட்டையின்றி லுங்கியோடு அமர்ந்து வேகு வேகுவென வரைந்து கொண்டிருப்பார் மாருதி சார் !
எங்கள் கண்ணெல்லாம் பளபளக்கும் வார்னிஷ் அட்டைப் படங்களோடு அங்கே சணல் கயிரில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் காமிக்ஸ் பண்டலின் மேலேயே இருக்கும். அத்துனையும் மாருதி சாரின் அட்டைப்படங்களைத் தாங்கியவை. ஒரு புதையலைப் போல அவரிடமிருந்து அதனை வாங்கி மார்போடு அணைத்துக் கொண்டு திரும்புவோம்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எண்ணைக் குளியல் எடுத்தால்தான் படிக்கக் கொடுப்பேன் என்று எங்கள் தாயார் கண்டிப்போடு சொல்லிவிடுவார். அவசர அவசரமாக குளித்து சீயக்காயில் அடி வாங்கிய கண்களோடு காமிக்ஸ்களை ஒரு செந்நாயின் வெறியோடு அடித்திழுத்துப் பிரித்தெடுத்துக் கொண்டு போய் மூலைக்கொருவராய் அமர்ந்து படித்துத் தீர்ப்போம்.
அன்றந்த நாளில் எங்கள் பால்யத்தை சுகந்தமாக்கி வைத்த மாருதி சாரை இனிக் காண முடியாது எனும்போது நெஞ்சடைக்காமல் என்ன செய்யும் ?
***
ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக கதை – சிறுகதை மாந்தர்களை வாசகர்களின் மனதில் உயிரோடு உலவ விட்ட சாகச தூரிகைக்காரர் மாருதி சார் !
அவரது தத்ரூப ஓவியங்களில் இடம்பெற்ற பெண்கள் எல்லாம் பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகு படைத்தவர்களாக ஜொலித்தார்கள்.
அது கண்டு அவர் மேல் ஆற்றாமை கொண்ட அன்றைய அவரது பெண் ரசிகைகள் அனைவரும் இன்றவரை மனமுவந்து ஆராதிக்கிறார்கள். அதுவே அவரது படைப்புத் திறனாகும் !
முத்தமிழறிஞர் கலைஞர் தன்னால் படைக்கப் பெற்ற ‘பெண் சிங்கம்’ மற்றும் ‘உளியின் ஓசை’ திரைப்படங்களுக்கான ஆடை வடிவமைப்பாளராக ஓவியர் மாருதி அவர்களையே அமர்த்த விரும்பினார். அதுவே அவரது படைப்புத் திறனுக்கான சான்றாகும் !
***
அன்றந்த நாளில் மைலாப்பூர் லக்ஷ்மி லாட்ஜின் 5 ஆம் எண் அறையை எனது தந்தையார் தனது அலுவலகமாக வைத்திருந்த அதே காலத்தில் 1 ஆம் எண் அறையில் மாருதி சார் இருந்தார்.
ஏறத்தாழ 17 ஆண்டுக் காலம் ஒரே அறையில் ‘பேச்சுலராக’ வாழ்ந்த ஒரே ஓவியர் மாருதி சார் என்பது ஆச்சரியக்கத்தக்கது.
தாய்மொழி மராட்டி என்றாலும் தமிழ் மேல் பெரும் நாட்டம் கொண்டவராக இருந்த மாருதி சார் எந்த நேரமும் சங்க இலக்கியம் பொழிந்து கொண்டிருக்கும் என்பதால் 5 ஆம் எண் அறையில் தான் அதிகம் வந்திருப்பார்.
ஆயிரமாயிரம் பெண் ரசிகைகள் அவருக்கு இருந்த போதிலும், கிஞ்ச்சித்தும் ஒழுக்கத்தை மீறாது வாழ்ந்த மாருதி சாரின் பேராண்மை போற்றத் தகுந்தது.
அதனால்தான் மாருதி சாரை ஓவியப் பெருந்தகை வேணுகோபால் சர்மா இறுதி வரையில் தன் மகனைப் போல பாவித்திருந்தார். லக்ஷ்மி லாட்ஜ் 5 ஆம் அறையில் தன்னைக் காண வந்த அண்ணா போன்ற பேராளர்களுக்கெல்லாம் மாருதி சாரை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.
தனது திருமணத்தை தாமதித்திக் கொண்டே இருந்தவரை ஒரு நாள் எனது தந்தை அழைத்துக் கண்டிக்க – சொந்த வீடு அமையும் வரையில் திருமணம் செய்ய மாட்டேன் சார் என உறுதியோடு மறுத்தார் மாருதி சார்.
மே ஃப்ளவர் கார்டன் குடியிருப்பில் ஒரு வீடு அமைய – குலுக்கல் அமைப்பில் அதில் சில பிரச்சினைகள் எழ – முதன் முறையாக தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அதனை முடித்து வைத்தார் வேணுகோபாலர் .
இராயப்பேட்டை ஸ்வாகத் ஓட்டலில் மாருதி சாரின் திருமண வரவேற்பு நிகழ்ந்ததும் – சிறுவர்கள் நாங்கள் அந்த லிஃப்டில் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்ததும் இன்றளவும் பசுமையான நினைவாகி நிற்கின்றது.
இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இருந்து வரவழைக்கப்பட்ட விலை உயர்ந்த தனது ஓவிய உபகரணங்களை மரணப் படுக்கையில் மாருதி சாரை அழைத்து அவரிடம் ஒப்படைத்தார் எனது தந்தையார். 1989ல் வேணுகோபால் சர்மாவின் இறுதி யாத்திரையை தூக்கிச் சுமந்த நால்வரில் ஒருவராவார் மாருதி சார் !
***
பின்பொரு நாள் எனது கல்லூரிக் காலத்தில் ‘வெண்ணிலா இலக்கிய வீதி’ எனுமொரு இலக்கிய வட்டத்தை துவக்கினேன். அதற்கான இலச்சினையை உருவாக்கித் தர வேண்டுமென மாருதி சாரிடம்தான் சென்று நின்றேன். கட்டி அணைத்துக் கொண்டார்.
வெண்ணிலாவுக்குள் இறக்கையோடு கற்பனைக் குதிரை ஒன்று பறப்பது போலொரு அட்டகாசமான லோகோவை உருவாக்கித் தந்தார். ஈரோடு தமிழன்பன் ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகள் அதனைப் பாராட்டிச் சொன்ன விதம் கேட்டு அகமகிழ்ந்து நெகிழ்ந்தார்.
***
மாருதி சாருக்கு நடைப்பயிற்சி பிடித்தமானதொன்று.
நாள்தோறும் தனது மே ஃப்ளவர் கார்டன் இருப்பிடத்திலிருந்து கிளம்பி மைலாப்பூர் குளம் வரையில் விரைந்து நடந்தபின் லஸ் கார்னரை தொட்டுத் திரும்புவது அவரது தினசரி வாடிக்கை.
ஒருமுறை அவரை லஸ் கார்னரில் சந்திக்க நேர்ந்தது. சூடாக ஒரு காஃபி சாப்பிடலாம் சார் என சுகநிவாஸ் ஓட்டலுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றேன். மெல்லக் கேட்டேன்…
“சார், ஊர் விட்டு ஊர் வந்து ஓகோவென சாதித்தவர் நீங்கள் ! உங்களுக்கான குரு என யாரை சொல்வீர்கள்?”
“ஒரு திருடனை சொல்வேன் !”
“திருடனா ?”
“ஆமாம் ஸ்ரீராம். இந்தப் பட்டிணத்துக்கு வந்து சேர்ந்த அந்த நாளில் நான் யாருமற்ற அனாதையாகத்தான் இருந்தேன். இரண்டு வேட்டிகள் இரண்டு சட்டைகளோடு கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் குடி புகுந்தேன். அங்கிருந்து கொண்டுதான் ஓவிய வாய்ப்பு தேடி அலைந்தேன். தன்னம்பிக்கை இல்லாத என் முகத்தை அன்று யாரும் கண்டு கொள்ளவே இல்லை தம்பி.
ஒரு நாள் எனது அழுக்கு வேட்டியை குளக்கரையில் வைத்து விட்டு குளிக்கப் போன போது அதனை ஒருவன் திருடிக் கொண்டு ஓடினான். மாரளவு குளத்து நீரில் நின்று கொண்டு அந்த திருடனைப் பார்த்து கண்ணீர் வர சிரித்துக் கொண்டிருந்தேன்.”
“ஏன் சார் ?”
“அட, என் அழுக்கு வேட்டியை திருடும் அளவுக்கு ஒருவன் இந்தப் பட்டிணத்தில் இருக்கிறான் என்றால் எனக்கென்னடா இங்கே குறைச்சல் ? அவனை விட நான் மேலானவனாக அல்லவா இருக்கிறேன் எனும் தெம்போடு குளத்தை விட்டுக் கிளம்பினேன். அந்த தன்னம்பிகை என் முகத்தில் தெரித்ததாலோ என்னமோ ஒரே நாளில் மூன்று வேட்டிகளுக்கும் ஒரு வார சோற்றுக்கும் சேர்த்து சம்பாதித்துக் கொண்டு குளக்கரைக்கு திரும்பினேன்.”
மாருதி சாரோடு சேர்ந்து நானும் கபகபவென சிரித்துக் கொண்டிருக்க சுக நிவாஸ் காஃபி ஆறிப் போயிருந்தது.
ஆறாமல் இருக்கிறது மாருதி சாரின் அந்தப் போதனை !
***
மாருதி சாரிடம் நான் கற்றுக் கொண்ட ஏராள தன்மைகளில் ஒன்று – தன்னை சந்திக்க வருபவர் யாராக இருந்தாலும் வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பும் அவரது மானுடப் பாங்கு !
அவர் பார்த்து ஆளாகிய சின்னஞ் சிறுவன்தான் எனினும் அவரை சென்று சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இரண்டு மாடிகள் இறங்கி வந்து என்னையும் வழியனுப்புவார். வேண்டாம் சார் என்றால் கேட்கவே மாட்டார்.
அந்தணரானவர் இடதுசாரி கொள்கையில் ஊன்றியவராக இருந்தார் !
தனது ஆருயிர் மனைவியை இழந்த பின்பு புனேவில் இருக்கும் இரண்டாவது மகள் வீட்டுக்கு சென்று விட்டவர், அவ்வப்போது சென்னைக்கும் வந்து தன் ரசிகர்களை – நண்பர்களை சந்தித்துக் கொண்டேயிருந்திருந்தார்.
***
திருவல்லிக்கேணி என்.கே.டி. ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எனது தந்தையாரின் பிறந்தநாள் விழாவில் பேச மாருதி சாரை பணிவோடு அழைத்திருந்தேன்.
ஏறத்தாழ முக்கால் மணி நேரம் வியக்க வைக்கும் அந்தக் காலத்துத் தகவல்களோடு ஆனந்தமாக உரையாற்றினார். அந்த வீடியோதான் அவரது இறுதிப் பதிவாக இருக்குமென நினைக்கிறேன்.
“எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் தம்பி” என்றபடி அவரது பர்சனல் செல்ஃபோன் நம்பர் ஒன்றை எனக்குத் தந்தார்.
நம்பி வாங்கிக் கொண்டேன்.
இன்றளவும் அந்த எண்ணுக்கு ஓயாது அழைத்துக் கொண்டே இருக்கிறேன்…
“நான் மாருதி பேசறேன்“ என்னும் அந்த சன்னமான குரலுக்கு ஏங்கியபடி…
நல்லவராம் மாருதி சார் என்னையும் ஏமாற்றிப் போனாரே !
கட்டுரையாளர் குறிப்பு:
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
காக்கா- கழுகு கதை… லேட்டா வந்து காப்பி கேட்ட நெல்சன்: ரஜினியின் முழு பேச்சு!
Comments are closed.