மனிதக்கழிவு கலந்த விவகாரம்: சமூகநீதி கண்காணிப்புக்குழு ஆய்வு!

Published On:

| By Kalai

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் சமூகநீதி கண்காணிப்புக்குழு விசாரணை நடத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சமூகநீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன் கருணாநிதி சாந்திரவீந்திரநாத் ஆகிய நான்கு பேர் கொண்ட‌ துணை குழுவினர் சம்பந்தப்பட்ட இறையூர் வேங்கைவயல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வெள்ளனூர் காவல் நிலையத்தில், சமூகநீதி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூக நீதி கண்காணிப்பு குழுவினர், மனித சமூகத்தில் இதுபோன்ற செயல் நடைபெறக்கூடாது என்பதே ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக உள்ளது, இந்த செயலை யார் செய்தது என்பதை கண்டறிய புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது.

 Social Justice Watch Committee study

குற்றவாளிகள் இறுதி செய்யப்பட்டு விட்டார்கள் என்று வரும் செய்திகள் வதந்தி மட்டுமே. இதில் ஆதாரப்பூர்வமாக குற்றவாளியை நீதிமன்றம் முன்பு ஆஜர்ப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.

இந்த விவகாரத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. காவல்துறையினர் மீது குற்றம் சுமத்த முடியாது அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் எங்களது ஆய்வு முடிந்த பின்பு ஆட்சியரோடு கலந்து ஆலோசனை செய்த பின்பு அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.

இது போன்ற நிகழ்வுகள் இனி வேறு எந்த பகுதியில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

அதேபோல பொதுமயானம், பொது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எல்லா கிராமங்களிலும் அமைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வோம்.

ஒரு சம்பவம் நடக்கும்போது அனைத்து தரப்பு மக்களையும் விசாரணைக்கு போலீசார் உட்படுத்த தான் செய்வார்கள்.

அது அந்த பகுதி மக்களுக்கு இடையூறாக தெரியலாம். ஆனால் உண்மை குற்றவாளிகளை அப்போதுதான் கண்டறிய முடியும்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் பெற்றுதரவும் வழிவகை செய்யப்படும்.

எந்த வழக்காக இருந்தாலும் காவல்துறையினருக்கு அழுத்தம் வரும். அதே போல் தான் இந்த வழக்கிலும் காவல்துறையினருக்கு அழுத்தம் வந்து இருக்கலாம். அதனையும் கடந்து அவர்கள் சுதந்திரமாக செயல்பட அரசு வழிவகை செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையினர் முறையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்று தெரிவித்தனர்.

கலை.ரா

கனிமொழியின் ‘தமிழ்நாடு’ கோலம்: அண்ணாவின் புள்ளி கலைஞரின் வரிசை!

365 நாள் 655 நிகழ்ச்சி 9000 கி.மீ பயணம்: முதல்வர் ஸ்டாலின் ஷெட்யூல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share