தமிழ்நாட்டின் பட்டியலின பெண், தலைவராக பதவி ஏற்கமுடியவில்லை. இதுதான் சமூக நீதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்கட்டும்செவல் பகுதியில் உள்ள பூலித்தேவன் நினைவு மாளிகையை பார்வையிட்டார். பச்சேரி கிராமத்தில் உள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களை சந்தித்தார் ஆளுநர்.
இன்று (செப்டம்பர் 29) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள விஸ்வகர்மா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசை கடுமையாக சாடி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “விஸ்வகர்மா திட்டத்தை தலைவர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். அதனால் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். விஸ்வகர்மா தொழிலாளர்கள் இல்லை என்றால் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் வளர முடியாது.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளன. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் வீடு கட்டும் திட்டத்தில் 40% நிதி பயன்படுத்தப்படவில்லை.
மத்திய அரசின் திட்டங்களுக்கு சாயம் பூசி சில கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. சிலர் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கின்றனர்.
தமிழக அரசு சமூக நீதி குறித்து பேசுகிறது. தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தை சேர்ந்த பெண், பஞ்சாயத்து தலைவராக தேர்வானார். ஆனால் இன்று வரை அவர் பதவி ஏற்கவில்லை என்று செய்தித்தாள்களில் படித்தேன்.
இப்படி இருக்கும் போது சமூக நீதி பற்றி எப்படி பேசுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது.
அரசு பின் தங்கியவர்களுக்காக கவலைப்பட வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமே தவிர அதனை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளக் கூடாது. சமூகத்தில் நஞ்சை பரப்பி பிளவுபடுத்தி வைத்திருக்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஆளுநர் சொன்ன பெண் யார்?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகாவில் நாயக்கனேரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக 2021ஆம் ஆண்டு நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இந்துமதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாயக்கனேரி ஊராட்சி மன்ற தொகுதி பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்துமதி.
இந்தசூழலில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இந்துமதியை ஊருக்குள் வரக்கூடாது என கூறி அவர்களை ஊரை விட்டு தள்ளிவைத்ததாக கூறப்படுகிறது.
கடந்த 11ஆம் தேதி இந்துமதி கணவர் பாண்டியன் ஆம்பூர் காவல் நிலையத்தில், தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாவும் குற்றம்சாட்டினார்.
தற்போது இவர்களது குடும்பத்தினர் ஆம்பூரில் உள்ள சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டுதான் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியா
அழகிரியை அகற்ற காங்கிரஸுக்குள் கடைசி முயற்சி!- ரகசியக் கூட்டம்!
எம்.எஸ்.சுவாமிநாதன்: பசுமைப் புரட்சியும் ஆன்மீக வேளாண்மையும்!
