கிச்சன் கீர்த்தனா: புடலங்காய் பொரித்த குழம்பு

Published On:

| By admin

கோடையில் வியர்வையால் உடலில் உள்ள தண்ணீரோடு சத்துகளும் வெளியேறிவிடும். இந்தச் சத்துகளை வெறும் தண்ணீராலும் பானங்களாலும் மட்டுமே ஈடு செய்ய முடியாது. இதற்காகவே, இயற்கை நமக்கு நிறைய காய்கறிகளை அளித்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது நீர்ச்சத்தும் தாது உப்புகளும் நிறைந்த புடலங்காய். இந்த ரெசிப்பியில் பருப்பு சேர்ப்பதால், புரதமும் மாவுச்சத்தும் சேர்ந்து உடலுக்கு நல்ல எனர்ஜியைத் தரும். மலச்சிக்கல் இருக்காது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

என்ன தேவை?

  • பாசிப்பருப்பு – 100 கிராம்
  • சிறிய புடலங்காய் – 2
  • தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
  • மிளகு – 10,
  • கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 1
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயத்தூள், எண்ணெய், கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

புடலங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி, விதையை நீக்கிவிட்டு, மஞ்சள் தூள், பாசிப்பருப்பு சேர்த்து, குக்கரில் ஒரு விசில்விட்டு இறக்கவும். தேங்காய்த் துருவல், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு, நைஸாக அரைத்துக்கொள்ளவும். வேகவைத்த புடலங்காயுடன், அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டுக் கொதிக்கவைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையைத் தாளித்து இறக்கவும்.

குறிப்பு: குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, அரை டீஸ்பூன் நெய் விட்டு, சாதத்தில் பிசைந்து தரலாம். பத்திய சமையலில் இடம்பெறும் குழம்பு இது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share