கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே கனியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் முன்பாக இன்று (செப்டம்பர் 27)விசாரணைக்கு வந்தது.
வழக்கின் முன்னேற்றம் குறித்த அறிக்கைகள் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது நீதிபதி, வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வருகிறது.
ஏற்கனவே 2 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என்றார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேதப் பரிசோதனை தொடர்பான அறிக்கைகள் உள்ள சிடியை தங்களுக்கு வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஆட்சேபணம் தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணை முடிவதற்கு முன்பாக எந்த ஆவணங்களையும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைப்பு தரவில்லை. மரபணு பரிசோதனைக்கு மாதிரிகளை வழங்க மறுக்கிறார்கள்.
விடுதியில் மாணவி பயன்படுத்திய செல்போனை வழங்க மறுக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
இதையடுத்து மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மாணவி மரண வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை அக்டோபர் 10 ம் தேதி தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.
கலை.ரா
10% இட ஒதுக்கீடு வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு!
வாட்ஸ் அப் வீடியோ கால் : சூப்பர் அப்டேட் கொடுத்த ஜூக்கர்பெர்க்