இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதிமந்தனா சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இவர் ஆடிய 9 ஆட்டங்களில் ஒரு சதம், 2 அரை சதம் உள்ளிட்ட 436 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்டார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த 29 வயதான ஸ்ருதி வந்தனா பிரபல இந்தி இசையமைப்பாளரான பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இந்நிலையில் பலாஷ் முச்சலுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை ஸ்மிருதி மந்தனா மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தி இருந்தார்.
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமண நிகழ்வுகள் நேற்று தொடங்கியது. இருவரின் திருமணத்திற்கு பிரதமர் மோடி இருவீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார்.
சாங்கிலியில் சாம்டோலில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தபோது ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக சாங்கிலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இதை ஸ்மிருதி மந்தனாவின் மேலாளரும் உறுதி செய்துள்ளார்.
