டெல்லியின் காற்று மாசு அளவு மிகவும் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியாவின் தலைநகரமான டெல்லி செங்கோட்டை, குதுப் மினார், இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களுக்குப் பிரசித்திபெற்றது. ஆனால் அதே போல் காற்று மாசுக்கும் டெல்லி பெயர்பெற்றது.
குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் டெல்லியின் காற்று மாசு அளவு மிக அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் காற்றில் உள்ள மாசு துகள்களும் பனியும் ஒன்றாகச் சேர்ந்து ‘ஸ்மாக்’ஆக(Smog) உருவாகும்.
இதனால் மக்கள் மூச்சுவிடுவதற்கே சிரமப்படுவது, சாலை பனி மூட்டமாக காணப்படுவதால் வாகன நெரிசல்கள் ஏற்படுவது, விமானங்கள் ரத்து செய்யப்படுவது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.
அதிகமான நான்கு சக்கர வாகனங்கள், குறைவான காற்றின் வேகம், அதிக மக்கள் தொகை, டெல்லியைச் சுற்றியிருக்கும் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களின் அறுவடைக்குப் பின் எரிக்கப்படும் வைக்கோல்களால் எழும் தூசி உள்ளிட்டவை தான் டெல்லியின் காற்று மாசு அடைவதற்குக் காரணம்.
இந்த நிலையில் இன்று(நவம்பர் 12) காலை முதல் டெல்லி முழுவதும் ‘ஸ்மாக் ‘ படர்ந்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் காற்று மாசு அளவுகோலின் படி இன்று மதியம் 12 மணி நிலவரப்படி டெல்லியின் காற்று மாசின் அளவு 404 ஆக உள்ளது.
இது மிகவும் மோசமான நிலையாகும். இதனால் டெல்லி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….