வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ‘மிக்ஜாம்’ புயல், இன்று (டிசம்பர் 4) முற்பகலில் வட தமிழ்நாட்டை நெருங்கும் என்றும், மேலும் அந்த புயல் தொடர்ந்து வடக்கு & வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிசம்பர் 5) அன்று முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதை தொடர்ந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இப்படியான நிலையில், நேற்று (டிசம்பர் 3) இரவு முதலே, சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வானிலை மையம் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சென்னைக்கு மிக அருகே வந்துள்ள ‘மிக்ஜாம்’ புயல், சென்னைக்கு கிழக்கே 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், அந்த புயல் மணிக்கு 14 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவித்தது.
ஆனால் இன்று (டிசம்பர் 4) காலை 9 மணி நிலவரப்படி மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த புயல், இப்போது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையை நோக்கி நகர்ந்து வந்த புயலின் வேகம் தற்போது குறைந்திருப்பதால்… கனமழை சென்னையில் மேலும் தொடரும்.
நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை சென்னையில் ஆங்காங்கே சூறாவளிக் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. தொடர் கன மழையும் பெய்துகொண்டிருக்கிறது.
பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழையும், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மிக்ஜாம் புயல்: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
இந்தியா கூட்டணி, இந்தியாவை திராவிட பண்பாட்டு நாடாக்க வேண்டும்!!
