தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தலைமை செயலகத்தில் நேற்று (மார்ச் 5) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. Raghupathi reply to Jayakumar
இதில் அதிமுக சார்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 7.2% என்ற தற்போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது” என்று கூறி முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது. அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?. தமிழ்நாட்டை திமுக தான் காப்பாற்றுவது போல் தோற்றத்தை உருவாக்க நாடகம் ஆடுகிறது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் ஜெயக்குமாருக்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (மார்ச் 6) தனது எக்ஸ் பக்கத்தில், “தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக! தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாடிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிகூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதலமைச்சரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார்.
தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா?
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது.
பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை. முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும்!” என்று பதிவிட்டுள்ளார். Raghupathi reply to Jayakumar