விமானத்திலிருந்து குதிக்கும் ‘ஸ்கை டைவிங்’ (Skydiving) சாகசம் பலருக்குக் கனவு. ஆனால், அந்தக் கனவே ஒருவரின் உயிருக்கு எமனாக மாறிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. விமானத்திலிருந்து குதித்த வீரர் ஒருவர், விமானத்தின் வால் பகுதியிலேயே சிக்கி அந்தரத்தில் தொங்கிய காட்சி தற்போது வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.
நடந்தது என்ன? ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து (Queensland) பகுதியில் உள்ள டல்லி விமான நிலையத்தில் இருந்து, ‘ஃபார் நார்த் ஃபிரீஃபால் கிளப்’ (Far North Freefall Club) சார்பில் ஸ்கை டைவிங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 20-ம் தேதி, செஸ்னா கேரவன் (Cessna Caravan) என்ற விமானத்தில் 17 பாராசூட் வீரர்கள் மற்றும் ஒரு விமானி பயணம் செய்தனர்.
விமானம் குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், வீரர்கள் குதிக்கத் தொடங்கினர். அப்போது ஒரு வீரர் குதிக்கும்போது, எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பில் இருந்த அவசரக்கால ‘ரிசர்வ் பாராசூட்டின்’ (Reserve Parachute) கைப்பிடி, விமானத்தின் இறக்கையில் (Flap) சிக்கிக்கொண்டது.
விமானத்தின் வாலில் சிக்கிய வீரர்: இதனால் பாராசூட் முன்கூட்டியே விரிவடைந்து, அந்த வீரரைப் பின்னோக்கி இழுத்தது. இதில் அவர் விமானத்தின் வால் பகுதியில் (Horizontal Stabilizer) மோதி, அங்கேயே சிக்கிக்கொண்டார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே, அவர் அதன் வாலில் தொங்கிக்கொண்டிருந்த காட்சி நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது.
சாதுர்யமாகச் செயல்பட்ட விமானி: திடீரென விமானத்தின் வேகம் குறைந்ததையும், பாரம் அதிகமானதையும் உணர்ந்த விமானி, முதலில் ஏதோ இன்ஜின் கோளாறு என்று நினைத்துள்ளார். பின்னர் நிலைமையை உணர்ந்த அவர், உடனடியாக “மேடே” (Mayday – அவசர உதவி) அழைப்பு விடுத்து, விமானத்தின் வேகத்தைக் குறைத்தார். இது அந்த வீரர் காற்றில் தூக்கி வீசப்படாமல் இருக்க உதவியது.
கத்திதான் காப்பாற்றியது! உயிருக்குப் போராடிய அந்த இக்கட்டான சூழலிலும், அந்த வீரர் பதற்றமடையவில்லை. தன்னிடம் இருந்த பிரத்யேகமான ‘ஹூக் கத்தி’யை (Hook Knife) எடுத்த அவர், சிக்கியிருந்த பாராசூட்டின் 11 கயிறுகளை அறுத்துத் தன்னை விடுவித்துக் கொண்டார்.
விமானத்திலிருந்து விடுபட்ட அவர், கீழே விழும்போது தனது முக்கிய பாராசூட்டை (Main Parachute) விரித்தார். அதுவும் லேசாகச் சிக்கியிருந்தாலும், எப்படியோ அதைக் கட்டுப்படுத்திப் பத்திரமாகத் தரையிறங்கினார். அவருக்குக் காலில் சிறு காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் மட்டுமே ஏற்பட்டன. விமானியும் சேதமடைந்த விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கினார்.
விசாரணை அறிக்கை: இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் (ATSB), “அந்த வீரர் கையில் கத்தி வைத்திருந்ததுதான் அவர் உயிரைக் காப்பாற்றியது” என்று பாராட்டியுள்ளது. சாகசங்களின்போது பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
