இந்திய விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ள மோடி அரசை எதிர்த்து நாளை (மார்ச் 28) விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளனர் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். SKM Farmers protest
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும், சம்யுத்தா கிசான் மோர்ச்சா என்ற அரசியல் சார்பற்ற அமைப்பின் SKM (NP) தமிழக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருபவர் பி.ஆர்.பாண்டியன்.
இவர், விவசாயம் தொடர்பான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பதிலும், பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டி வருபவர். அந்த வகையில் கடந்த 19-ம் தேதி சண்டிகரில் மத்திய அரசின் அழைப்பின் பேரில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சவுகான், பிரகலாத்ஜோஷி, பியூஷ் கோயல் உள்ளிட்ட அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றார். SKM Farmers protest

காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட அவரை வழிமறித்த பஞ்சாப் மாநில காவல் துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களோடு வந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகளை கைது செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அன்று இரவே பட்டியாலா மத்திய சிறையில் தடுப்பு காவல் சட்டத்தின் அடிப்படையில் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் அடைக்கப்பட்டனர். SKM Farmers protest
இந்த நிலையில் ஐந்து நாட்கள் சிறைவாசம் முடிந்து நேற்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 200-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் வரவேற்பளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “மத்திய அரசு அழைப்பின் பேரில் கடந்த 19-ம் தேதி சண்டிகரில் நடைபெற்ற குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றோம்.
மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், பிரகலாத்ஜோஷி பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அனைவரும் அரங்கை விட்டு வெளியே வந்தோம். அப்போது பஞ்சாப் மாநில பகவந்த்மான் அரசு காவல்துறையை ஏவி விட்டு வலுக்கட்டாயமாக தீவிரவாதிகளை கைது செய்வது போல் கைது செய்து பட்டியாலா சிறையில் அடைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வகையில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பகவந்த்மான் அரசு கைது செய்துள்ளது வெட்கக்கேடானது. ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைத்துள்ளது.
மத்திய அரசு சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி இந்தியா முழுமையில் இருக்கிற வர்த்தகர்களுடைய கருத்துகளை கேட்டு மே 4-ம் தேதி அடுத்த கட்ட கூட்டத்தை நடத்துவதென முடிவு எடுத்த நிலையில், அதைச் சீர்குலைக்கும் வகையில் கைது நடவடிக்கையை பகவந்த்மான் அரசு மேற்கொண்டது.
அரசியல் சுயநல நோக்கத்திற்காக ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும் கேவலப்படுத்தி இருக்கிறது. இதேபோல இந்திய விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ள மோடி அரசை கண்டித்தும் நாளை விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளனர்” என்றார்.
இந்த நிலையில் “நாளை தமிழ்நாட்டிலும் மிக தீவிரமாகப் போராட்டத்தை நடத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரப்படுத்துவோம். அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்த இருக்கிறோம்” என்று இந்திய நதிகள் இணைப்புச் சங்க நிறுவனர் பி.அய்யாக்கண்ணு உறுதிபடுத்தியுள்ளார். SKM Farmers protest