INDvsPAK : வம்பிழுத்த பாகிஸ்தான் கோச்… பிரதமர் மோடிக்கு குங்குமம் அனுப்பும் போராட்டம் அறிவிப்பு!

Published On:

| By christopher

sivasena (U) going to protest against bjp ahead of ind vs pak

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதை அடுத்து, பிரதமர் மோடிக்கு குங்குமம் அனுப்பும் போராட்டத்தை நடத்த உள்ளதாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரகத்தில் கடந்த 9ஆம் தேதி தொடங்கிய ஆசியக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரக அணியை ஊதித் தள்ளியது.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் ஓமன் அணியை இன்று (செப்டம்பர் 12) சந்திக்கிறது.

எனினும் இருநாட்டு ரசிகர்களின் கண்களும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டியைக் காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன், இந்திய அணியை வம்பிழுக்கும் வகையில் பேசியுள்ளார்.

5 தரமான ஸ்பின்னர்கள்!

அவர், ‘‘உலகின் தலைசிறந்த ஸ்பின்னராக முகமது நவாஸ் இருக்கிறார். கடந்த 6 மாத காலமாகவே நல்ல பார்மில் இருக்கிறார். இவரால், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மேட்ச் வின்னராக இருக்க முடியும். மேலும், அப்ரார் அகமது, சுபியன் முகீன், சைம் ஆயுப், சல்மான் அலி ஆகா போன்றவர்களும் நன்றாக பந்துவீசுகிறார்கள். அணியின் சிறப்பம்சமே ஸ்பின்னர்கள்தான். 5 தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இது எங்களது அணியின் வலிமையை காட்டுகிறது. எனவே நாங்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து அதிகம் சிந்திக்கவில்லை’’எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், மற்றும் அக்ஷர் படேல் என தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் ஹெஸ்ஸனின் பேச்சு சர்ச்சையாக மாறியுள்ளது.

இதற்கு இந்திய அணி தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை என்ற நிலையில், இதற்கான பதிலடியை ஞாயிற்றுக்கிழமை கிடைக்கும் என இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருப்பக்கம் கிரிக்கெட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்து பிசிசிஐ-யும், பாஜகவும் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளதாக சிவசேனா (UBT) கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உத்தவ் தலைமையிலான சிவசேனா ராஜ்யசபா எம்.பி.யும் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எனது குங்குமம் (சிந்தூர்) எனது நாடு!

அதில் ”பஹல்காமில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பிறகு, அவர்களின் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள வலியை நாம் இன்னும் காண்கிறோம். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் முடிவடையவில்லை என்று பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் கூறினர். இரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது என்றும் அவர்கள் கூறினர். ஆனால் இப்போது மட்டும் இரத்தமும் கிரிக்கெட்டும் எப்படி ஒன்றாக செல்ல முடியும்? இந்த கிரிக்கெட் போட்டி வெட்கமின்மை மற்றும் துரோகத்தின் அடையாளம்.

பொதுமக்களின் உணர்வுக்கு எதிரான இந்த கிரிக்கெட் போட்டியை சிவசேனாவால் பொறுத்துக்கொள்ள முடியாது. என துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிராக சிவசேனாவின் மகளிர் பிரிவு ‘எனது குங்குமம் (சிந்தூர்) எனது நாடு’ என்ற போராட்டத்தைத் தொடங்கும். பிரதமர் மோடிக்கு பெண்கள் குங்குமம் (சிந்தூர்) அனுப்புவார்கள்” என அவர் தெரிவித்தார்.

தேசபக்தி திடீரென வெடித்துள்ளது!

எனினும் சஞ்சய் ராவத்தின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, “இது சிவசேனாவின் முழுமையான பாசாங்குத்தனம். லோக்சபா தேர்தலின் போது, ​​பாகிஸ்தான் கொடிகள் ஊர்வலங்களில் ஏற்றப்பட்டன, பச்சை நிற மாலைகள் பயன்படுத்தப்பட்டன, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் உத்தவ் தலைமையிலான சிவசேனாவுக்கு பிரச்சாரம் செய்ய வந்தனர். அப்போது ராவத்துக்கு இந்த நாடு நினைவில் இல்லை, ஆனால் இப்போது ஒரு கிரிக்கெட் போட்டியால் அவரது தேசபக்தி திடீரென வெடித்துள்ளது” என பாஜக செய்தித் தொடர்பாளர் நவ்நாத் பன் விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share