ADVERTISEMENT

சிவாஜி குடும்ப சொத்துப் பிரச்சினை: சமரசம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த  எத்தனையோ படங்களில் எத்தனையோ குடும்ப பிரச்சினைகள்,  எத்தனையோ சொத்து பிரச்சினைகளை மையமாக வைத்த கதைகள் அமைந்திருக்கின்றன.

அவற்றை  சிவாஜி கணேசன் தியாகம் செய்தோ,  தன் சாமர்த்தியத்தாலோ தீர்த்து வைக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகம் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அவர் நடித்த சினிமாக்களை மிஞ்சும் அளவுக்கு அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

ADVERTISEMENT

இப்போது சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அது தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் சிவாஜி குடும்பம் நடப்பு அறிந்தவர்கள்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு ஆகிய 2 மகன்களும் சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள்,. இவர்களில் மகள்கள் இருவரும் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்கள்.

ADVERTISEMENT
Sivaji Family Property Issue

அந்த வழக்கில் தந்தை சிவாஜி கணேசன் தன் உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களில் அவருடைய மகள்களாகிய எங்களுக்கு பங்கு கொடுக்க எங்கள் சகோதரர்கள் ராம்குமார், பிரபு மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே இன்னொரு மனுவையும் அவர்கள் தாக்கல் செய்தனர் அதில் என்ன குறிப்பிட்டிருந்தார்கள் என்றால்,  சாந்தி தியேட்டர் பங்குகளை தங்களுக்குத் தெரியாமலேயே ராம்குமாரும், பிரபுவும் இன்னொரு பில்டருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார்கள்.

ADVERTISEMENT

இதுபற்றி வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசியபோது, “ மறைந்த நடிகர் கணேசனின் மகள்கள் சாந்தி நாராயணசாமி மற்றும் ராஜ்வி கோவிந்தராஜன் ஆகியோர் தங்களின் சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் ராம்குமார் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான சொத்து உரிமையை ஏமாற்றியதாகக் கூறி சென்னை  உயர் நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்தனர்.

அதில் அவர்கள் சிவாஜி சொந்த உழைப்பால் வாங்கிய சொத்துகளை பட்டியலிட்டுள்ளனர். சாந்தி தியேட்டர் நிறுவனத்தில் சிவாஜி, கமலா ஆகியோர் பெயரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அவர்களது மறைவுக்குப் பிறகு மகன்கள் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை தி. நகரில் இருக்கும் சிவாஜி இல்லமான அன்னை இல்லம் சிவாஜியால் கட்டப்பட்டது.  அவரது மறைவுக்குப் பின் ராம்குமாரும், பிரபுவும் அங்கே வசிக்கிறார்கள்.

Sivaji Family Property Issue

அந்த வீட்டில் தங்களுக்கு பங்கு உள்ளது. கோபாலபுரத்தில் தன் மனைவி கமலா பெயரில் சிவாஜி வாங்கிய சொத்து இன்று சிவாஜி என்கிளேவ் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டது. அதிலும் மகள்களுக்கு பங்கு கொடுக்கப்படவில்லை.

சென்னை ராயப்பேட்டையில் சிவாஜி நான்கு வீடுகளை வாங்கினார். அதில் ஒரு வீட்டில் மகள்கள் வசிக்கிறார்கள். மற்ற மூன்று வீடுகளின் வாடகையும் ராம்குமார், பிரபுவுக்குத்தான் போகிறது. அந்த வாடகையிலும் பங்கு கொடுக்கப்படவில்லை.

இப்படி சொத்துகள் மட்டுமல்ல சிவாஜிக்கு சொந்தமாக ஆயிரம் சவரன் தங்க நகைகளும், 500 கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் இருக்கின்றன. இவற்றை மகன்கள் மட்டுமே எடுத்துச் சென்றுவிட்டதாகவும் இதில் மகள்களுக்கு பங்கு வேண்டும் என்பதுதான் சிவாஜி மகள்களின் வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பிரதான சொத்து வழக்கின் இடையேதான் சாந்தி தியேட்டர் பங்குகள் விற்பனைக்கு தடை கோரி இன்னொரு வழக்கும் சிவாஜி மகள்களால் தாக்கல் செய்யப்பட்டது. சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரி,  சாந்தி, மற்றும் ராஜ்வி சார்பில்  மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.

இந்த  மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.  இந்த பரிவர்த்தனைகள் 2010 ஆம் ஆண்டிலேயே  முடிந்துவிட்டதாகவும் குடும்பப் பிரச்சினை காரணமாக இப்போது இதை எழுப்பியிருக்கிறார்கள் என்றும்   இதை வாங்கிய அக்‌ஷ்யா ஹோம் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாதாடியது.  இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிவாஜியின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது” என்கிறார்கள் வழக்கறிஞர்கள் தரப்பில். 

இதற்கிடையே  பிரதான சொத்து வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ராம்குமார், பிரபு ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை நாடியிருக்கிறார்கள்.

இதற்கிடையே கடந்த அக்டோபர்  1 ஆம் தேதி சிவாஜியின் 95 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை அடையாறில் இருக்கும் அவரது மணிமண்டபத்தில் இருக்கும் சிவாஜி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து  அரசு விழாவாக கொண்டாடி மரியாதை செலுத்தினார்.

அப்போது ராம்குமார், பிரபு அவர்களது குடும்பத்தினர் முதல்வரை வரவேற்றனர். சில நிமிடங்கள் சிவாஜி குடும்பத்தினர் முதல்வருடன் தனியாக பேசிக் கொண்டிருந்தபோது இந்த சொத்து விவகாரம் பற்றி முதல்வர் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள் ராம்குமாரும், பிரபுவும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைஞரின் உயிர் நண்பர். சிவாஜி ஒரு மேடையில், ‘என் ஆயுளை எடுத்துக் கொண்டாவது என் நண்பன் கருணாநிதியின் ஆயுளை இயற்கை தாய் நீட்டிக்க வேண்டும்’ என்று பேசினார்.

அப்படிப்பட்ட கலைஞரின் நண்பர் சிவாஜி குடும்பத்தில் நிலவும் இந்த சொத்துப் பிரச்சினை ஸ்டாலினை மிகவும் வருந்த வைத்திருக்கிறது. இதனால்… கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி  சாந்தி தியேட்டர் பங்குகள் விற்பனை குறித்த தீர்ப்பு வெளிவந்த நிலையில் பிரபுவின் வழக்கறிஞரான எஸ்.ராமன் முதல்வர் தரப்பினரால் அழைக்கப்பட்டிருக்கிறார்.

Sivaji Family Property Issue

இந்த சொத்து விவகாரம் பற்றி பேசப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

முதல்வர் தலையிட்டு  நடிகர் திலகத்தின் குடும்பத்தில் ஒரு சமரசத்தை உண்டுபண்ணுவார் என்று நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள் இந்த விவகாரத்தை அறிந்தவர்கள்.

-வேந்தன்

தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை!

திருமணங்கள், கூட்டங்களைத் தவிர்க்கவும்: ஐஎம்ஏ அறிவுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share