சங்கராபுரத்தில் இரண்டு பெண்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏற்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 15 வார்டுகள் கொண்ட பெரிய ஊராட்சியாக சங்கராபுரம் உள்ளது. 22,393 வாக்காளர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி இந்த ஊராட்சியில் ஏற்கனவே தலைவராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த மாங்குடியின் மனைவி தேவி தேர்தலில் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஐயப்பன் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி போட்டியிட்டார். இந்த நிலையில் சங்கராபுரத்தில் கடந்த 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 11,924 வாக்குகள் பதிவான நிலையில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், முதலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது .
தேவி மாங்குடி ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, இதற்கு மற்றொரு வேட்பாளரான பிரியதர்ஷினி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சில வாக்குப் பெட்டிகள் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணவில்லை என்று குற்றம்சாட்டிய அவர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று முறையிட்டார்.இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விவகாரம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து காரைக்குடி டிஎஸ்பி அருண் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். போலீஸ் விசாரணையைத் தொடர்ந்து மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜெயகாந்தன், தேர்தல் பார்வையாளர் கருணாகரன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை நடந்த அறையில் ஆய்வு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தேவி மாங்குடி வெற்றிபெற்றதாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்வதாகவும் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்காகத் தேவி மாங்குடி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை முடிவில் பிரியதர்ஷினி 63 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இருவருக்கும் வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் சங்கராபுரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் யார் வெற்றி பெற்றார்கள் என்று குழப்பம் நீடித்து வந்த நிலையில், தேவி மாங்குடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் முதலில் வாக்குகள் எண்ணப்பட்டபோது 5871 வாக்குகளை நான் பெற்று இருந்தேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரியதர்ஷினி 5809 வாக்குகள் பெற்றிருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் நான் வெற்றி பெற்றதாகச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் அதிகாலை 5 மணியளவில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே பிரியதர்ஷினி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏற்கத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி இவ்வழக்கை நேற்று அவசர வழக்காக நீதிபதிகள் சுப்ரமணியன், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவராக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் இவ்வழக்கு குறித்து தமிழகத் தேர்தல் ஆணையர் மற்றும் பிரியதர்ஷினி தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
