பெரியநரிக்கோட்டையில் உள்ள ஜெயத்தோட்டம் மகிழ்ச்சி இல்ல விடுதியில் தங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவந்த மாணவிகளிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு புதிதாக உருவாக்கப்பட்ட போக்ஸோ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சாட்சிகளை மிரட்டியதாக ஆசிரியர் முருகன், அவரது மனைவி, அரசு சிறப்பு வழக்கறிஞராக இருந்த இந்திராகாந்தி மூவர் மீதும் சிவகங்கை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 2020 பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரசு சிறப்பு வழக்கறிஞர் இந்திராகாந்தி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று (மார்ச் 2) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்திராகாந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த தகவலை அறிந்த இந்திராகாந்தி, மற்றவர்கள் போன் மூலமாகவும், நேரடியாகவும் சென்று மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தன்னை காப்பாற்றுமாறு ஆதரவு கேட்டுள்ளார். இதனையடுத்து, வழக்கறிஞர்கள் குழு ஒன்று, சிவகங்கை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, இந்திரா காந்தியை கைதுசெய்யக் கூடாது என மனு அளித்துள்ளனர். ஆனால், ‘இந்த விஷயத்தில் நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் எஸ்.பியைச் சென்று பாருங்கள்’ என ஆட்சியர் கைவிரித்துவிட்டார்.
இதனையடுத்து, அடுத்தகட்டமாக எஸ்.பி.ரோகித்தை சந்தித்து முறையிட்டுள்ளனர். விசாரணை அதிகாரியான தேவக்கோட்டை ஏ.எஸ்.பியும் ஒரு ஐபிஎஸ்தான். அவர் விசாரணையில் நான் குறுக்கிடமுடியாது என்று கைவிரித்துவிட்டார் எஸ்.பி. இதனால் வழக்கறிஞர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.
**மின்னம்பலம் டீம்**
