Sivaganga District in drought
தமிழகமெங்கும் மழை பெய்துவரும் நிலையில் சிவகங்கையில் பருவமழை போதிய அளவு பெய்யாததால், சுமார் 1000 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதையடுத்து டேங்கர் லாரி முலம் நீர் இறைத்து பயிரை விவசாயிகள் காக்க போராடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரந்தை, வடக்கு மாரந்தை, கோளந்தி, கோடிக்கரை இலந்தகரை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இந்தப் பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். இந்த பகுதியில் இரண்டு வகையான நெல் ரகங்கள் பயிரிடப்படுகிறது. ஜோதி ரக நெல்லை விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் தற்போது கருகி வருகிறது.
சில கண்மாய்களில் உள்ள குறைந்த அளவு தண்ணீரை ஆயில் மோட்டர் வைத்து நெல் வயல்களுக்கு டியூப் மூலம் கொண்டு வருகின்றனர்.
இந்தப் பகுதியில் விவசாயிகள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக, ஆர்.என்.ஆர் நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை காக்க வேறு வழியில்லாததால், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து இறைத்து வருகின்றனர்.
இந்த ஒரு டேங்கர் லாரி தண்ணீரை விவசாயிகள் 500 ரூபாய்க்கு வாங்குகின்றனர். ஒரு ஏக்கர் நெற்பயிர்களுக்கு 25 டேங்கர்கள் தண்ணீரை பாய்ச்சுகின்றனர்.
ஏற்கனவே உழவு, விதைப்பு பணி, உரம், மருந்து தெளிப்பது, களை எடுப்பு பணி உள்ளிட்ட வேலைகளை சேர்த்து சுமார் 25,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர்.
தற்போது இந்த டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவதால் விவசாயிகளுக்கு மேலும் செலவு அதிகரித்து வருகிறது.
இருப்பினும் அனைத்து விவசாயிகளும் இந்த டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளதால் அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் பகுதியில் போதிய அளவு பருவ மழை பெய்யாததால் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டோக்கன் பெறாதவர்களுக்கு வெள்ள நிவாரண தொகை வழங்கப்படுமா? – உதயநிதி பதில்!
தென் மாவட்டங்களில் மழை, வெள்ளம்: ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
Sivaganga District in drought
