பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. siraj steal potm in chinnasamy against rcb
இதன் காரணமாக முதலிடத்தில் இருந்த பெங்களூரு அணி 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று (ஏப்ரல் 2) இரவு மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணிக்கு, வில்லனாக வந்தார் அந்த அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட சிராஜ்.
சிராஜ் சிறப்பான பவுலிங்!
முதல் விக்கெட்டாக கோலி 7 ரன்னில் ஆட்டமிழக்க, சிராஜின் மிரட்டலான பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினர் பில் சால்ட் (14) மற்றும் படிக்கல் (4).
கேப்டன் பட்டிதாரும் 12 ரன்னில் அவுட் ஆனதால் தடுமாறிய அந்த அணியில் லிவிங்ஸ்டன் அடித்த அரைசதத்தால் 20 ஓவர்களில் 169 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில் (14) விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றினார். எனினும் தமிழக வீரர் சாய் சுதர்சன்(49), ஜோஸ் பட்லர் (73*) மற்றும் ரூதர்போர்ட் (30*) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தில் குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து பெங்களூரு அணியை அதன் சொந்த மைதானத்தில் விரட்டியடித்த முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன்!
அப்போது அவர் பேசுகையில், ”நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். கடந்த 7 வருடங்களாக ஆர்சிபி அணியில் இருந்தேன். இந்த பெருங்கூட்டத்திற்கு முன்னால் எனது ஜெர்சி சிவப்பு நிறத்தில் இருந்து நீலத்திற்கு மாறியதில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன்.
ஆனால் இன்று பந்தைப் பெற்றவுடன் ரொனால்டோவின் ரசிகனாக சிறப்பாக பந்துவீசினேன். இந்திய அணியில் இருந்து விலகி இருந்த போது, நான் என் தவறுகளை சரிசெய்து என் உடற்தகுதியில் மேம்படுத்தினேன்.
குஜராத் டைட்டன்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்த போது, நான் ஆஷிஷ் பாயிடம் (நெஹ்ரா) பேசினேன். அவர் என்னிடம், ’போய் உன் பந்துவீச்சை அனுபவித்து வீசு. இஷு (இஷாந்த்) பாய் என்ன லைன், லெந்தில் பந்துவீச வேண்டும் என்று கூறினார்.
என்னை பொறுத்தவரை, மனநிலை நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், அதன்பின்னர் பிட்ச் ஒரு பொருட்டல்ல” என்று சிராஜ் தெரிவித்தார்.