ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ‘SIR’ பணிகள் தொடங்கும் : தேர்தல் ஆணையம்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் (SIR) அடுத்த வாரம் தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பீகாரில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. 

ADVERTISEMENT

அதில் பீகாரில் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்கள் பெயர் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 22 லட்சம் பேர் இறந்து விட்டதாகவும் 36 லட்சத்துக்கும் அதிகமானோர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டார். இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். 

ADVERTISEMENT

இந்த சூழலில் தமிழகத்திலும் அடுத்த வாரம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யநாராயணன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த தகவலை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

சத்யநாராயணன் தனது மனுவில், திமுகவினர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக 13,000 அதிமுக ஆதரவாளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறியிருந்தார். 

அதாவது 1998 ஆம் ஆண்டு தியாகராய நகர் தொகுதியில் 2, 08,349 பேர் வாக்காளர்களாக இருந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு வெறும் 36 ஆயிரத்து 656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள் தொகைக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். 

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் தியாகராய நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து தவறான சேர்க்கை, நீக்கத்தை கலைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார் 

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 24) தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் சார்பில், திநகரில் மொத்தமாக வாக்காளர்கள் சேர்க்கையும் நீக்கமும் நடந்துள்ளதால் அவற்றை சரிபார்த்து திருத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

தேர்தல் ஆணையம் சார்பில், நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்போது மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் பீகார் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share