வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடர்ந்த மனு டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பீகாரைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகத்திலும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், சமத்துவம் மற்றும் வாழ்க்கை உரிமையின் கொள்கைகளை எஸ்ஐஆர் மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு முரணானது என்றும்
விசாரணை இல்லாமல் பெயர்களை நீக்க அனுமதிப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் உரிமை மீறப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் இலக்குகளை எட்டாவிட்டால் அவர்கள் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வில் இன்று (டிசம்பர் 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, பூத் அதிகாரிகள் மீது இலக்குகள் திணிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பிஎல்ஓ-க்கலாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது இலக்குகளை அடைய அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் இந்த இலக்கை அடைய தவறினால் சட்டப் பரிவு 32 இன் கீழ் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எஸ்ஐஆர் பணியால் நாடு முழுவதும் சுமார் 21 பிஎல்ஓ-க்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழகத்தில் புயல், வெள்ளம் மற்றும் கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் பிஎல்ஓ-க்கல் தங்கள் இலக்குகளை அடையா விட்டால் அவர்கள் மீது கட்டாய நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 4ஆம் தேதி விசாரிப்பதாக கூறினர்.
