SIR: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

Published On:

| By Mathi

Election Commission SIR

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இன்று ஜனவரி 18-ந் தேதி கடைசி நாள்.

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை SIR மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டைப் பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டன இந்த நீக்கங்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் தமிழ்நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.43 கோடியாகக் குறைந்துள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 15.19% குறைவாகும். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக சுமார் 14 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் சுமார் 12 முதல் 13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரைவு பட்டியலில் உள்ள சில வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு இந்த நோட்டீஸ்களில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு இன்று ஜனவரி 18-ந் தேதியுடன் முடிவடைகிறது. வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை https://voters.eci.gov.in
என்ற இணையதளத்தில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் இல்லாவிட்டால், படிவம் 6 (புதிய பதிவு), படிவம் 8 (திருத்தம்/இடம் மாற்றம்) போன்ற படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான இறுதி வாய்ப்பு இதுவாகும்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ந் தேதி வெளியிடப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மற்றும் போட்டியிட இறுதிப் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share