சிறப்புத் தீவிர மறுஆய்வுப் படிவம் (SIR) இந்திய அரசு தன் குடிமக்களை எப்படி நடத்துகிறது, எப்படி எல்லா விஷயங்களையும் சிக்கலானதாக ஆக்குகிறது என்பவற்றுக்கான எடுத்துக்காட்டு.
டி.எம். கிருஷ்ணா
என்னுடைய சக குடிமக்கள் பலரைப் போலவே, நானும் என்னுடைய வட்டார அலுவலரிடமிருந்து சிறப்புத் தீவிர மறுஆய்வுப் படிவத்தைப் (Special Intensive Review – SIR) பெற்றேன். SIRஇன் நுணுக்கங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும்: SIR படிவமே குழப்பம்தான். கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் சீராக இல்லை. நிரப்பப்பட வேண்டிய சில கட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு முன் இருமுறை சிந்திக்க வேண்டியுள்ளது. இத்தகைய படிவத்தில் வாக்காளர்கள் தவறிழைப்பதற்கான வாய்ப்பு அதிகம். இந்தச் செயல்முறை சட்டப்பூர்வமான ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக, பெயர்கள் நீக்கப்படுவதற்கே வழிவகுக்கும். பெயர்கள் நீக்கப்படுவது பெரும்பாலும் மோசமாக வடிவமைக்கப்பட்ட SIR செயல்முறையின் விளைவாக இருக்கலாம்.
என்னுடைய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அவர்களின் தொகுதிகளில் என்ன நடந்தது என்று கேட்டபோது, ஒவ்வொரு வட்டார அலுவலரும் (BLO) வாக்காளர்களுக்குத் தெரிவிக்கும் தகவல்களில் முரண்பாடுகள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த அலுவலர்கள் வெளிப்படையாகவே மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சீரான அல்லது தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை. சில மையங்களில் விஷயம் சிக்கலில்லாமல் இருந்தது. மற்ற இடங்களில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட கதைதான். வாக்காளர்கள் 2003-2004ஆம் ஆண்டில் நடந்த SIRஇன் போது வாக்களித்த வாக்குச் சாவடியில் இருந்த தொகுதி எண், பிரிவு, தனிப்பட்ட வாக்காளர் பட்டியல் எண்ணை நினைவில் வைத்திருக்க வேண்டும் அல்லது கண்டறிய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்!

கல்வியறிவு பெற்ற எனக்கே இந்தச் செயல்முறை குழப்பமாகத் தோன்றினால், குறைந்த விழிப்புணர்வு கொண்டவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்துபார்த்துக்கொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்களிடம் வட்டார அலுவலர் ஆதார் அட்டையைக் கேட்டு, பின்னர் வாக்காளருக்கான படிவத்தைப் பூர்த்தி செய்கிறார். பூர்த்தி செய்தவுடன், உள்ளிடப்பட்ட தகவல்களை அவரிடம் சொல்லிச் சரிபார்ப்பதில்லை. ஒரு சேவையகத்தில் இந்தத் தகவலைப் பதிவேற்ற அந்த அதிகாரிக்கு மிகக் குறைந்த அவகாசமே உள்ளது. தவறுகள் நடப்பது உறுதி. எனவே, வாக்காளர்கள் எந்தத் தவறும் செய்யாமல் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள். வட்டார அலுவலரால் பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டிய நகல்தான் தாங்கள் சமர்ப்பித்ததற்கான ஆதாரம் என்று பலருக்குச் சொல்லப்படவே இல்லை; அதாவது, வாக்காளர்களிடம் தாங்கள் படிவத்தைச் சமர்ப்பித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
சாதாரணக் குடிநபர் ஒருவர் தன்னுடைய பெயர் காணாமல் போனால் மேல்முறையீடு செய்வார் என்று இந்தியாவின் தேர்தல் ஆணையம் நம்பினால், அது அலட்சியமாகவும் அக்கறையில்லாமலும் இந்த விஷயத்தை அணுகுகிறது என்றுதான் அர்த்தம். குடிமக்கள் அரசாங்கத்தின் ஆணைகளைப் பின்பற்றுகிறார்கள், அவ்வளவுதான். இந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதன் மூலம் தேர்தல் ஆணையம் குடிமக்களின் வெகுளித்தனத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவதையும் அதில் பல விதமான மாற்றங்களை மேற்கொள்வதையும் எளிதாக்கியுள்ளது.
SIR விதிவிலக்கு அல்ல

இந்தக் குழப்பம் SIRஇன் தனிச் சிறப்பு மட்டுமல்ல. இந்திய அரசாங்கம் தன் குடிமக்களுக்காக உருவாக்கியிருக்கும் ஒவ்வொரு படிவமும் அல்லது செயல்முறையும் உதவிசெய்வதைவிடக் குழப்புவதற்காகவே உருவாக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. இதனால் குடிமக்கள் அச்சமின்றி அந்தப் பணியை முடிப்பது ஏறக்குறைய சாத்தியமற்றதாகிறது. ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிப்பது எப்போதும் பதற்றத்தை ஏற்படுத்தும் செயலாகும். நாம் எதையாவது தவறாகப் புரிந்துகொண்டோமோ என்று கவலைப்படுகிறோம். அதன் மொழி சிக்கலானதாக உள்ளது. கேள்விகள் குழப்பமான விதத்தில் வடிவமைக்கப்படுகின்றன.
பெரும்பாலும் அது இருக்க வேண்டிய வரிசையில் இருப்பதில்லை. சில சமயங்களில், படிவமே வாசிக்க முடியாதபடி இருக்கும். படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது, அலுவலரிடம் கேள்விகள் கேட்க முடியாது. ஏனெனில் அவர் கடிந்துகொள்ளலாம் அல்லது கேலி செய்யலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஒரு இடைத்தரகரின் அல்லது படிவத்தைப் பூர்த்தி செய்யும் அலுவலரின் தயவில் இருக்கிறார்கள். விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் செயல்முறை இதுபோன்ற சம்பிரதாயங்கள் எவ்வளவு கடினமாக உள்ளன என்பதற்கான சிறந்த உதாரணம். அடுத்தடுத்த அரசாங்கங்கள் விஷயங்களை எளிதாக்கியுள்ளதாகக் கூறின. அவர்களைப் பொறுத்தவரை, காகித ஆவணங்களில் இருந்து ஆன்லைன் தாக்கல் முறைக்கு மாறுவது என்பது எளிமைப்படுத்துதலாக உள்ளது. ஆனால் உண்மை அதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
குடிமக்கள் அரசு சார்ந்த ஒரு சேவையை எளிதாகப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் இருப்பவர்கள் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதம் இணக்கமாக இருக்க வேண்டும். படிவங்களைச் சமர்ப்பிக்கும் முறை எளிமையானதாக இருக்க வேண்டும். வருமான வரிக் கணக்கைப் பொறுத்தவரை, கணக்காளரல்லாத ஒருவருக்கு எதுவுமே புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. கணக்குகளைத் தாக்கல் செய்யும் அனைவரும் தங்கள் பட்டயக் கணக்காளர்களை (Chartered Accountants) நம்புகிறார்கள். அது அப்படி இருக்கக் கூடாது. தனிநபர் வருமான வரித் தாக்கலுக்கான சம்பிரதாயங்கள் புரிந்துகொள்வதற்கும் பூர்த்தி செய்வதற்கும் எளிமையாக இருக்க வேண்டும்.
அரசு மானியத்திற்கான விண்ணப்பமும் இப்படித்தான் உள்ளது. கிராமப்புற இந்தியாவில் உள்ள ஒரு கலாச்சார அமைப்பு, ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்றும் தெரியாததால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும் புகார் கூறியது. உள்ளூர் அரசுப் பிரதிநிதி உதவ மாட்டார். அவர், ‘எல்லாம் ஆன்லைனில்தான் இருக்கிறது, அங்கு சென்று தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறுவார். அரசாங்கம் தன் அதிகாரத்துவ அமைப்புகள் மூலம் குடிமக்களுடன் தொடர்புகொள்ளும் விதம் ‘ஐயோ பாவம்’ என்ற மனோபாவம் கொண்டதாகவும், அதிகாரப் படிநிலை அமைப்பைக் கொண்டதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது. சமூகத் தொடர்புகளிலும் ஒவ்வொருவருக்குமான வாய்ப்புகளிலும் உள்ள பாகுபாடு பற்றி நாம் தீவிரமாக விவாதிக்கிறோம். ஆனால் விண்ணப்பப் படிவங்கள், தகவலைப் பெறுவதற்கான வழிகள், அலுவலர்-குடிநபர் இடையிலான தொடர்பு போன்ற எளிய விஷயங்கள் மூலம் ஏற்றத்தாழ்வு நிலைத்திருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம்.
அரசின் அதிகார இயல்பு
அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது? சிலர் இதற்குக் காரணம் பிரிட்டன் விட்டுச் சென்ற சிவப்பு நாடா முறையும் அதிகாரவர்க்கப் பணிக்கலாச்சாரமும் என்று குற்றம் சாட்டுகின்றனர். மற்றவர்கள் சட்டத் தேவைகளைக் குறிப்பிடலாம். இதற்கான பதில், அதிகாரத்தைக் காண்பிப்பதற்கும் அதன் குடிமக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசுக்கு இருக்கும் இயல்பான நாட்டத்தில்தான் உள்ளது என்று நான் நம்புகிறேன்.
முழு அதிகாரத்துவ அமைப்பும் இந்த இயல்பின் மீது கட்டப்பட்டுள்ளது. தனிநபர்கள் எவ்வளவு கனிவானவர்களாக இருந்தாலும், அரசு அதிகார வட்டத்தில் நுழையும்போது அதிகாரவர்க்க இயல்பின் ஒரு பகுதியாகிவிடுகிறார்கள். அவர்கள் அதை மீறினால் அவர்களால் அரசின் ஊழியராகக் காலம் தள்ள முடியாது.
ஊழல் என்பது அரசின் இந்த இயல்பின் விளைவுதான். இந்தக் கட்டமைப்பிற்குள் உள்ள அனைவரும் இதைக் கைக்கொள்ள வேண்டும் என்று உணர்கிறார்கள். குடிமக்களும் ‘அரசாங்கங்கள் இப்படித்தான் இருக்கும்’ என்ற வாதத்தின் மூலம் இத்தகைய நடத்தையை இயல்பாக்கிவிடுகிறார்கள். அரசு, தன் குடிமக்களுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும், அரசாங்கத்திற்காகப் பணிபுரிபவர்களின் மாற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல; அடிமட்டச் செயல்முறைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியதுமாகும். அரசு இயந்திரத்திற்குள் இருப்பவர்களிடம் மாற்றம் எதுவும் இல்லாதபோதிலும், சரியாகச் செய்யப்பட்ட ஒன்றிற்கான ஒரு எடுத்துக்காட்டு தகவல் அறியும் உரிமைச் (Right to Information) சட்டமாகும்.
அரசியல் கட்சிகளை அடையாளம் காணும் வழிமுறையாகத் தேர்தல் ஆணையம் சின்னங்களை உருவாக்கியது. ஒவ்வொரு குடிநபரும் தன்னுடைய வசிப்பிடம் எதுவாக இருந்தாலும் வாக்களிக்க முடியும் என்பதை உறுதிசெய்தது. இவையெல்லாம் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையின் பலன்கள். தேர்தல் ஆணையம் அந்த உணர்வை மீட்டெடுக்க வேண்டும்.

டி.எம். கிருஷ்ணா, இசைக்கலைஞர், எழுத்தாளர்.
நன்றி: தி டெலிகிராஃப்
