ராஜன் குறை
மன்னராட்சி காலத்திலேயே கூட மக்கள் கருத்திற்கு மதிப்பு இருந்தது. ஏனென்றால் எவ்வளவுதான் சர்வாதிகாரியாக இருந்தாலும் மக்கள் ஆதரவு இல்லாமல் ஆட்சி வெகுகாலம் நீடிக்க முடியாது. அதனால் மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொள்ளாமல் காட்டாட்சி நடத்தினால் அது நிலைக்காது என்பது எப்போதுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. என்னதான் கடவுளின் ஆசி பெற்றவர்கள் என்று மன்னர்களை பூசாரிகள் கூறினாலும், கடவுள்கள், பூசாரிகள், மன்னர்கள் அனைத்தையும் உருவாக்கியது மக்கள்தானே.
பாரதீய ஜனதா கட்சியினர் கொண்டாடும் ராமர் கதையை வைத்தே துவங்குவோம். வால்மீகி ராமாயணத்தின் கடைசியில் ஒரு சிக்கலான சூழ்நிலை உருவாகும். அது என்னவென்றால் சீதையை இலங்கையிலிருந்து மீட்டுக்கொண்டு வந்து ராமர் அரசராக முடிசூடிய பிறகு, பொதுமக்கள் சீதையை ராமர் ஏற்றுக்கொண்டது குறித்து ஐயப்பட்டு பேசுவதாக அவருக்குத் தெரிய வருகிறது. அப்போது அவருக்கு அரசர்களுக்கான ஒரு முக்கியமான நெறி நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால் அரசன் மக்களின் ஐயத்திற்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதுதான் அது. அதனால் கர்ப்பிணியான சீதையைக் காட்டுக்கு அனுப்பி விடுகிறார்.

இதை ரோம சாம்ராஜ்யத்தின் வரலாற்றை வைத்துச் சொல்லும்போது சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த சொலவடைக்குக் காரணம் ஜூலியஸ் சீசரின் இரண்டாவது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததாக பேசப்பட்டதால் அவர் அந்த மனைவியை விவாகரத்துச் செய்து விட்டதுதான்.
வெறும் வதந்தியை வைத்தே விவாகரத்துச் செய்ய வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதுதான் “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்பது. மன்னரின் மனைவியரை பாத்திரமாக்கி குறைசொல்லும் ஆணாதிக்க சிந்தனை இருந்தாலும், மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அளவில் இந்த சொலவடையை இன்றும் அரசியல் தத்துவ விவாதத்தில் பயன்படுத்துகிறார்கள்.
இப்படியெல்லாம் மன்னாராட்சி காலத்திலேயே சொல்லப்பட்ட நிலையில், இன்று இந்தியக் குடியரசு எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் மக்களாட்சியின் அடிப்படைகளையே தகர்க்கும் விதமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை எப்படி புரிந்துகொள்வது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. சென்ற வார நிகழ்வுகளில் ராகுல் காந்தி வீசிய H Bomb மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

பிரேசில் நாட்டு பெண்மணி எப்படி ஹரியானா வாக்களர் பட்டியிலுக்குள் வந்தார்?
சென்ற வாரம் புதன் கிழமை, நவம்பர் 5-ஆம் தேதி, இந்திய மக்களாட்சி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளே களவாடப்பட்டு, காங்கிரஸ் வெற்றி பெறுவதற்குப் பதிலாக பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற வைக்கப்பட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அவர் கூறியவற்றை வரிசைப்படுத்தி புரிந்துகொள்ள வேண்டும்.
முதலில், வாக்களிப்புக்குப் பின் நட த்தபட்ட கருத்துக் கணிப்புகள், எக்ஸிட் போல் எனப்படுபவை அனைத்தும் காங்கிரஸ்தான் ஆட்சியமைக்கும் என்று கூறின. தேர்தலுக்கு முன் நடக்கும் கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போவது உண்டு என்றாலும், வாக்களிப்புக்குப் பின் நடத்தப்படும் கணிப்புகள் பெருமளவு சரியாக இருக்கும். ஐந்து எக்ஸிட் போல்கள் காங்கிரஸ் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 54 தொகுதிகள் முதல் 62 தொகுதிகள் வரை பெறும் என்று கணித்தன. பாஜக 18 முதல் 29 தொகுதிகள் வரை பெறும் என்றும் கணிக்கப்பட்டது. பலராலும் நம்பகமானதாகக் கருதப்படும் இந்தியா டுடே+சி வோட்டர் கணிப்பில் காங்கிரசிற்கு 58 தொகுதிகள், பாஜக-விற்கு 20 தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டது.
முடிவுகள் வெளியான போது பாஜக 48 தொகுதிகளும், காங்கிரஸ் 37 தொகுதிகளும் வென்றிருந்தன. பிற கட்சிகள் 5 தொகுதிகள் பெற்றிருந்தன. காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்குகள் 54.31 இலட்சம்; பாஜக பெற்ற வாக்குகள் 55.49 இலட்சம். மொத்த வித்தியாசம் என்பது ஒரு இலட்சத்து 18 ஆயிரம் வாக்குகள்தான். இதனைக் குறித்துக்கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி குறிப்பாக 8 தொகுதிகளை சுட்டிக்காட்டுகிறார். இந்த எட்டு தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது ஐந்தாயிரம் வாக்குகளுக்குக் குறைவாகவே உள்ளது. ஒரு தொகுதியில் வெறும் 32 வாக்குகள்தான். இந்த எட்டு தொகுதிகளின் மொத்த வித்தியாசம் 22.779 வாக்குகள்தான். இந்த எட்டு தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருந்தால் அது ஆட்சியமைத்திருக்கும்.
அதனால் என்ன, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி என்பது நமது தேர்தல் முறையில் சகஜம்தானே என்று கேட்கலாம். அங்கேதான் அடுத்த அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தருகிறார் ராகுல் காந்தி. அவர் ஒரு பெண்ணின் புகைப்பட த்தைக் காட்டி இந்த பெண் எந்த மாநிலம் என்று கேட்கிறார். பிறகு கூறுகிறார் அவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று.
அந்த பெண், லாரிஸ்ஸா நேரி என்ற பெயர் கொண்டவர், ஒரு சிகையலங்கார நிபுணர்; தன் நண்பருக்காக அவர் ஒரு புகைப்பட த்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் அந்த நண்பரின் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டு ஹரியானா வாக்காளர் பட்டியிலில் இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் எப்படி? சீமா, சுவீட்டி, சரஸ்வதி என்று வெவ்வேறு பெயர்களில் 22 வாக்காளர்களாக ராய் என்ற தொகுதியைச் சேர்ந்த பத்து வாக்குச் சாவடிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த பெண் “நான் இந்தியாவிற்கே சென்றதில்லை, பிரேசிலை விட்டு எங்குமே சென்றதில்லை, என் புகைப்படத்தை இப்படி பயன்படுத்தியுள்ளார்களே” என்று வியப்பு தெரிவித்துள்ளார். புகைப்படங்களைத் தொகுத்துத் தரும் வலைத்தளங்களில் அவர் நண்பரான புகைப்படக்காரர் எடுத்த இந்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது. பலராலும் இலவசமாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் யார் தரவிறக்கம் செய்து வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை உருவாக்க பயன்படுத்தினார்கள் என்பதைத் தேர்தல் ஆணையம்தான் கூற வேண்டும்.

இந்த போலி வாக்காளர் அடையாளத்தைப் பயன்படுத்தி யாரும் வாக்களித்தார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்றால் வாக்குச்சாவடியில் பதிவான காணொலிக் காட்சிகளை, சிசிடிவி காமிரா காட்சிகளைத்தான் சரிபார்க்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த காட்சிகளைப் பகிர மறுக்கிறது. அவற்றை அழித்துவிட்டது. இந்த நிலையில் அந்த போலி சீமா, சுவீட்டி, சரஸ்வதி பெயர்களில் எல்லாம் யாரேனும் வாக்களித்தார்களா என்பதைத் தேர்தல் ஆணையம்தான் கூற வேண்டும்.
பிரச்சினை இந்த ஒரு பெண் மட்டுமல்ல. பிரேசில் நாட்டு பெண்ணின் புகைப்படம் என்பதால் இது அதிக சுவாரசியத்தைத் தருகிறது. வேறொரு இந்தியப் பெண்ணின் புகைப்படம் நூறு வாக்காளர் பெயர்களில் பதிவாகியுள்ளது. இந்த நூறு ஓட்டையும் அவரே போடுவார் என்பதில்லை. யாரோ கிட்ட த்தட்ட அதுபோல இருக்கும் பெண்கள் அந்த போலி வாக்காளர் அடையாளத்தில் வாக்களித்திருக்கலாம் என்கிறார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி கூறும் இன்னொரு முக்கியமான கருத்து இத்தகைய மொத்தப் போலி ஓட்டுகள் ஒரே புகைப்பட த்துடன் உருவாவது, கணிணித் தரவுகளைக் கையாளும் மையத்திலிருந்துதான் என்பது. அங்கேதான் ஒரு புகைப்படத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வெவ்வேறு பெயர்களில் போலி வாக்களர்களைச் சேர்க்க முடியும். ஏற்கனவே, நமது வாக்காளர் அட்டைகளிலும், ஆதார் அட்டைகளிலும் கூட நிகழும் பிழைகளை கவனித்தால் அவையெல்லாம் கணிணி தரவேற்றத்தில் நிகழ்பவை என்பதை உணரலாம்.
கணிணி தரவுகள் உருவாக்கம் மற்றும் மேலாண்மையை வெளிப்படையானதாக, பொதுமக்கள் சரிபார்புக்கு உட்பட்டதாக மாற்றாமல் இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியாது. யாரோ தாற்காலிக ஊழியர்களை வைத்தோ, ஒப்பந்தக்காரர்கள், சரியான பயிற்சியற்றவர்களை வைத்தோ வாக்காளர் பட்டியல் போன்ற முக்கியமான கணிணித் தரவுகளை உருவாக்குவது மிகவும் ஆபத்தானது. இதில் நிறைய முறைகேடுகள் பல மட்டங்களில் நடக்கின்றது. ராகுல் காந்தி எழுப்பிவரும் ஓட்டுத் திருட்டு பிரச்சினையின் மூலாதாரம் இந்தத் கணிணித் தரவுக் கட்டுப்பாட்டில், மேலாண்மையில் நிலவும் மர்மம்தான்.
மொத்தம் 25 இலட்சம் போலி ஓட்டுகள் இவ்விதம் ஹரியானாவில் உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறார். இரட்டை ஓட்டு உள்ளவர்கள் 5,21,619; பொய் விலாசம் உள்ளவர்கள் 93,174; பிரேசில் பெண் போல பல ஓட்டுக்கள் உள்ள வாக்காளர்கள் 19,26,351. ஆக மொத்தம் போலி வாக்குகள் 25 இலட்சம். இப்போது பாஜக வெற்றி வித்தியாசத்தை கவனிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த வாக்கு வித்தியாசமே ஒரு இலட்சத்து பதினெட்டாயிரம்தான். குறிப்பாக எட்டு தொகுதிகளின் வெற்றி வித்தியாசத்தின் மொத்தம் வெறும் 22,779 வாக்குகள்தான். 25 இலட்சம் போலி வாக்காளர்களை வைத்து இந்த சிறிய வெற்றியை பெறுவது கடினமல்ல என்றுதான் கூறுகிறார் ராகுல் காந்தி. மொத்தமே இரண்டு கோடி வாக்குகள் உள்ள ஹரியானாவில் 25 இலட்சம் போலி வாக்குகள் என்றால் எட்டு ஓட்டுகளில் ஒன்று போலி என்றாகிவிடும்.
வழக்கம்போல பாஜக இதனை முற்றிலுமாக மறுக்கிறது. ராகுல் காந்தி அந்நிய சக்திகளுடன் சேர்ந்துகொண்டு நாட்டின் பெயரைக் கெடுக்கிறார்; தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்றெல்லாம் கடுமையாகத் தாக்குகிறார்கள். ஆனால் வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் கொடுத்ததுதான். காங்கிரஸ் கட்சி வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்குகளையெல்லாம் தரவேற்றம் செய்து, தொகுத்து ஆராய்ந்ததில் இந்த போலி வாக்கு மோசடியை கண்டுபிடித்துள்ளது.
தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்று தெரியவில்லை. வழக்கம்போல போலி வாக்காளர்கள் தவறுதலாகச் சேர்க்கப் பட்டிருக்கலாம்; ஆனால் அவர்கள் வாக்களிக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால் சிசிடிவி காட்சிகளைத் தராமல் அவர்கள் சொல்வது நம்பகத்தன்மையற்றது. வாக்குச் சாவடிகளில் காங்கிரஸ் முகவர்கள் இல்லையா என்று கேட்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், அதற்கான போலி அடையாள அட்டையை ஒருவர் கொண்டு வந்தால், அவரைத் தடுப்பது கடினம்.
புகைப்படங்களை ஒப்பு நோக்குவதோ, அதே புகைப்பட த்துடன் இன்னொருவர் வந்தார் என்பதை நினைவில் வைத்திருப்பதோ கடினம். பல புகைப்படங்கள் தெளிவற்று இருப்பதால் அதனை வைத்துக்கொண்டு ஒருவரை வாக்களிப்பதிலிருந்து தடுக்க முடியாது.
இதெற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்கலாம். அது மிகவும் சுலபம். வாக்காளர் பட்டியலை அனைவரும் தேர்தல் ஆணைய வலைத்தளத்திலிருந்து டைனமிக் டேட்டாவாக, அதாவது பலவாறு தொகுத்துப் பார்க்கத்தக்க டேட்டா ஃபைலாக தரவிறக்க இயலவேண்டும். அப்படி செய்தால் கட்சிகள் ஒரே பெயரில், ஒரே புகைப்பட த்தில் பல வாக்காளர்கள் உள்ளார்களா, ஒவ்வொரு தெருவிலும், வீட்டிலும் மொத்தம் எத்தனை வாக்காளர்கள் உள்ளார்கள் என்பதையெல்லாம் சுலபத்தில் சரிபார்க்கலாம்.

சிறப்புத் தீவிர சீர்திருத்தம் (SIR: Special Intensive Revision)
தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பேச்சாளர்கள் இவ்விதமான போலி வாக்குகள், இரட்டை வாக்குகள் பிரச்சினையை சீர்செய்யத்தான் சிறப்புத் தீவிர சீர்திருத்தம் என்று கூறுகிறார்கள். ஆனால் பீஹாரில் செய்த சீர்திருத்தத்தில் அறுபது இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களே தவிர, குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதா என்பதை இனிமேல் ஆராய்ந்துதான் கண்டறிய வேண்டும்.
இப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைப் பார்த்தால் மிகப்பெரிய குளறுபடிகள்தான் உருவாகும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இருபதாண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட சீர்திருத்தம் தொடர்பான விவரங்களைக் கேட்கிறார்கள். அதாவது பழைய வாக்காளர் என்றால் 2002-ஆம் ஆண்டு அவர் எங்கே எந்த தொகுதியில், எந்த பாகத்தில் இருந்தார் என்று கூறவேண்டும். புதிய வாக்காளர் என்றால் அவரது உறவினர், தாயோ, தந்தையோ 2002-ஆம் ஆண்டு எந்த தொகுதியில் எந்த பாகத்தில் இருந்தார் என்பதைக் கூற வேண்டும்.
இந்த தகவல்கள் இல்லையென்றால் வாக்காளர் பட்டியலில் ஒருவர் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு சரியான விடையில்லை. ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சொல்கிறார்கள். இதில் அடிப்படையிலேயே பல பிரச்சினைகள் எழுகின்றன. இந்த நாட்டில் குடியிருப்பவர்கள் குடிமக்கள். அவர்களுக்கு வாக்குரிமை என்பது அடிப்படை உரிமை. ஆனால் தன் அடையாளத்தை சான்றாதாரங்கள் மூலம் நிரூபித்துதான் வாக்குரிமை பெற வேண்டும் என்றால், அவருக்கு இயற்கையிலேயே உள்ள குடியுரிமையும், வாக்குரிமையும் மறுக்கப்படுகிறது.

ஏன் இவ்விதம் நிரூபணம் கேட்கிறீர்கள் என்றால், அந்நிய நாட்டிலிருந்து ஊடுறுவியர்கள், நம் நாட்டு குடிமக்கள் இல்லாதவர்கள் வாக்களிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். தேர்தல் ஆணையத்திற்குக் குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. யாராவது குடிநபர் இல்லையென்றால் அரசுதான் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, வாக்குரிமையை சாக்காக வைத்து தேர்தல் ஆணையம் குடியுரிமையை ஆராய முடியாது.
மேலும் சமகால மக்களாட்சிக் குடியரசுகளில் ஒருவர் ஓரிட த்தில் வசித்து, அங்கே பணியாற்றி வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேறி பணிபுரிந்து வருகிறார்கள். பல நாடுகளில் தேர்தல்களில் போட்டியிட்டு வென்று பதவி வகிக்கிறார்கள். குடியுரிமை என்பதை வம்சாவழி உரிமையாக நவீன குடியரசுகள் கருதுவதில்லை. அமெரிக்காவில் பணி புரியச் சென்ற இந்தியர்கள் பலர் முதலில் கிரீன் கார்ட் பெருவதும், பின்னர் குடியுரிமை பெறுவதும் கடந்த நூறாண்டுகளில் நிறைய நிகழ்ந்துள்ளது. பத்து வருடங்கள் அமெரிக்காவில் பணி புரிந்த யாரும் அநேகமாக அங்கே குடியுரிமை பெற்று விடுவார்கள். இப்போதுதான் டொனால்ட் டிரம்ப் அந்நியர்களை வெளியேற்றும் இனவாத அரசியலை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய தேர்தல் ஆணையம் குடியுரிமையை சந்தேகிக்கும் பெயரில், சரியான ஆவணங்கள் இல்லாத ஏழை, எளிய மக்களின், சிறுபான்மை மக்களின் வாக்குரிமையை பறிக்க முயல்கிறதோ என்ற அச்சத்தை பரவலாக பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்க்கின்றன. தமிழ்நாட்டு முதல்வர் இதனை பாஜக-வின் சதி என்றே வர்ணித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டு நகரங்களில் தி.மு.க தலைமையில் ஆர்பாட்டங்கள் நடக்கப் போகின்றன. தி.மு.க தொடுத்துள்ள வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படப் போகின்றது.
ஏற்கனவே மின்னணு வாக்கு இயந்திரங்களின் பயன்பாட்டினால் பலரது நம்பிக்கையை இழந்துள்ள தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி அடுக்கடுக்காக வெளியிட்டுவரும் வாக்காளர் பட்டியில் முறைகேடுகள், அவசரடியாக நடக்கும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.
மக்களாட்சியில் மக்களே அரசாட்சியின் மூலாதாரம். மக்கள்தான் அரசமைக்க வேண்டும். அரசு யார், யார் மக்கள் என்று முடிவு செய்யக்கூடாது. அந்நிய தேசத்தவர் ஊடுறுவி இருந்தால் அதனை காவல்துறை மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அதைச் சாக்கிட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்க முடியாது. தன் அடையாளத்தை நிரூபித்து வாக்குரிமை பெறுவது மக்கள் பொறுப்பு என்று அரசு கூறுவது மக்களாட்சியின் அடித்தளத்தையே தகர்ப்பதாகும். யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பல அரசியல் ஆர்வலர்கள் இதனைக் கடுமையாகக் கண்டித்து குரல் கொடுத்து வருகிறார்கள். அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. ஏதேதோ வழக்குகளை சுவோ மோட்டோ என்று ஆங்கிலத்தில் கூறுவதுபடி, தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம் மக்களாட்சியை காப்பாற்ற தானாக முன்வந்து தேர்தல் ஆணையத்தினை நெறிப்படுத்த வேண்டும்,
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
