SIR- விண்ணப்ப படிவங்கள்: இன்று கடைசி நாள்; டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல்

Published On:

| By Mathi

SIR TamilNadu

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை தருவதற்கு இன்று டிசம்பர் 14 கடைசி நாள். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விண்ணப்ப படிவங்கள் கொடுத்து அவற்றை திரும்பப் பெறும் பணிகள் டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது டிசம்பர் 11-ந் தேதி வரை முதலில் நீட்டிக்கப்பட்டது; 2-வது முறையாக டிசம்பர் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT

வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 100% நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வாக்காளர்கள் தங்களிடம் உள்ள படிவங்களை வழங்க இன்று கடைசி நாள். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதனையடுத்து பிப்ரவரி 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

ADVERTISEMENT

இதனிடையே தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.

ஏற்கனவே தங்கள் பணியைத் தொடங்கியுள்ள சிறப்புப் பார்வையாளர்கள், பிப்ரவரி 2026-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் வரை இந்த மாநிலங்களில் வாரத்தில் இரண்டு நாட்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்கள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் கூட்டங்களை நடத்துவார்கள்.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த செயல்முறையும் சீராகவும், வெளிப்படையாகவும், பங்கேற்புடனும் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, சிறப்புப் பார்வையாளர்கள், மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேரிலோ, காணொலிக் காட்சி வாயிலாகவோ ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்வார்கள். எந்தவொரு தகுதியுள்ள வாக்காளரும் விடுபடாமல் இருக்கவும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்கவும், சிறப்புப் பார்வையாளர்கள், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்முறையைக் கண்காணிப்பார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share