இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் தேர்தல் ஆணையம் SIR பணிகளை மேற்கொண்டிருந்தது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று டிசம்பர் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் இன்று வெளியிட்டார்.
இந்த பட்டியலின் படி, மொத்தம் 1.03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது வாக்காளர் பட்டியலில் 10.12% ஆகும்.
இப்பட்டியலின் படி தற்போது புதுச்சேரியில், 7.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் ஜனவரி 15 வரை பட்டியலில் சேர்க்க கோரி விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும்.
