“கருப்புக்கு பயந்து மோடிக்கு வெள்ளை குடை”: ஸ்டாலின் மீது அதிமுக மாணவரணிசெயலாளர் தாக்கு!

Published On:

| By Kavi

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, அண்ணா பல்கலை முன்பு மாணவர்களுக்கு கருப்பு பேண்ட் (பட்டை) வழங்கிய அதிமுக மாணவர் அணியினர் இன்று (ஜனவரி 6) கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

டிசம்பர் 25ஆம் தேதி அண்ணா பல்கலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், யார் அந்த சார்? என்று கேள்வி எழுப்பி, பதாகைகளை ஏந்தி அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சென்னை எக்ஸ்ப்ரஸ் அவென்யூ மாலில் போராட்டம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இன்று (ஜனவரி 6) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், யார் அந்த சார் என்று பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவைக்குள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு முன்னதாக சுமார் 8.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலை வெளியில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக மாணவர் சங்க செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, “மாணவர்களாய் மாணவர்களுக்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கருப்பு பட்டையை வழங்க முயன்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், சுமார் 200 பேரை கைது செய்தனர். 100க்கும் மேற்பட்ட கருப்பு பட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

அப்போது சிங்கை ராமச்சந்திரனுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளே வராமல் ஒரு ஓரமாக நின்று மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்க முயன்றதற்கு கைது செய்துள்ளனர். ஏன் கருப்பை பார்த்து பயப்படுகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அவர் பேசிக்கொண்டிருக்குபோது, அவரை வேனில் ஏற்றிய போலீசார் அருகில் உள்ள மண்டபத்துக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

அப்போது சிங்கை ராமச்சந்திரனிடம் வீடியோ காலில் வந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “போலீசார் எதுவும் செய்ய முடியாமல் கைபாவையாக இருக்கின்றனர். ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதைதான் செய்வார்கள். ஒரு அட்வகேட்டாக என்னை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. ஸ்டாலின் ஆட்சியில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடக்கிறது” என்று கூறி, எதுவாக இருந்தாலும் உங்களுக்கு அதிமுக கட்சி உறுதுணையாக இருக்கும் என்று பேசினார்.

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கம் மூலம் சிங்கை ராமச்சந்திரன், “ஜனநாயக முறையில் நடக்கும் போராட்டத்தை கூட அராஜகமாக ஒடுக்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, “எதிர்க்கட்சி போராட்டம் என்றால் பயம். யார்_அந்த_SIR என்று கேட்டால் பயம். மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிந்தால் பயம். கருப்பு பட்டை கொடுத்தால் பயம். சட்டசபை நிகழ்வுகளை LIVE-ல் ஒளிபரப்பு செய்யவும் பயம். அது சரி… கருப்பு குடை பிடிக்க பயந்து வெள்ளைக் குடை பிடித்தவர் தானே” என்று பிரதமர் மோடியை ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலின் வரவேற்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பாஜக, நாதக, பாமக ஆகியோரும் அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணங்காமுடி, பிரியா

9 குடும்ப உறுப்பினர்களை இழந்த செல்ல நாய்… விமான விபத்தில் தாங்க முடியாத சோகம்!

மாஜி அமைச்சர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : நீதிமன்றம் அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share