மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி் 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் தக்லைஃப். இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. Simbu emotional speech at thuglife audio launch
இந்த நிலையில் சென்னை சாய் ராம் கல்லூரியில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மே 24) பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
அதில் படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ள சிம்பு பேச்சின் தொடக்கத்தில் படத்தில் இடம்பெற்ற அத்தனை கலைஞர்களின் பெயர் சொல்லி நன்றி தெரிவித்தார்.
த்ரிஷாவும் நானும்…
அவர், “ஜோஜு ஜார்ஜ் சார் உங்களோட நடிப்பு என ரொம்ப பிடிக்கும். உங்களுடன் பணியாற்றியது சந்தோசம். நாசர் சார்கூட பல படங்கள் நடிச்சிருக்கேன். இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல். நீங்க ஒரு பையன் மாதிரி என்ன பாத்துக்கிட்டீங்க.
அபிராமி மேமோட நடிப்பு இந்தப் படத்துல கண்டிப்பாக பேசப்படும். அசோக் செல்வன் என் தம்பி மாதிரி. அவர் இன்னும் நெறைய படங்கள் பண்ணனும். அவருக்கு திறமை இருக்கு. இன்னும் பெரிய இடத்துக்கு வருவாரு.
த்ரிஷாவும் நானும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா ‘ பண்ணியிருந்தோம். அதுக்கப்புறம் நாங்க சேர்ந்து நடிக்கிறதைப் பற்றி பலரும் எதிர்பார்த்தாங்க. டிரெய்லர் வந்ததும் பலரும் ஷாக் ஆகிட்டாங்க. அவங்க சொன்ன மாதிரி இன்னும் பல சர்ப்ரைஸ் இருக்கு. படம் வந்ததுக்கு அப்புறம் அது எல்லோருக்கும் தெரிய வரும்.
எனக்கு ரெட் கார்ட் போட்ட நேரத்துல…
ரஹ்மான் சாரை சின்ன வயசுல இருந்து தொந்தரவு பண்ணியிருக்கேன். இப்போதும் பண்ணிட்டு இருக்கேன். உங்களோட நெறைய டிராவல் இருக்கு. பீப் சாங் வந்தபோது எனக்கு கஷ்டமான நேரம். அப்போ எனக்காக ஊருக்கு போகம, அவர் பண்ணினதுதான் ‘தள்ளிப் போகாதே’ பாடல். என் அப்பா படத்துல இருந்து வெளில வந்து எனக்கு பாட வாய்ப்புக் கொடுத்தது ரஹ்மான் சார்தான். அதனால் தன் இதுவரைக்கும் தெலுங்கு, மலையாளம், இந்தினு 150 பாட்டுக்கு மேல பாடிருக்கேன்.
மணி சார் நான் சின்ன பையனா இருக்கும்போது ‘அஞ்சலி’னு ஒரு படம் எடுத்தாரு. அந்தப் படம் பார்த்துட்டு நான் அழுக ஆரம்பிச்சுட்டேன். ‘நானும் இதே வயசுதானே ஏன் மணி சார் என்னை நடிக்கக் கூப்பிடல’னு சொன்னேன். எப்படியோ என்ன ஆறுதல்படுத்திட்டாங்க.
அப்போ நான் இவர் நம்மைக் கூப்பிடவே மாட்டார், ரெண்டு பேருக்கும் செட் ஆகாதுனு நினைச்சேன். ஏன்னா, நான் வளர்ந்து நடிச்சது எல்லாமே மாஸ், மசாலா படங்கள்தான். அப்படியான நேரத்துல எனக்கு ரெட் கார்ட் கொடுக்கிற மாதிரியான சூழல் வந்தது. அந்த நேரத்துல என்ன வச்சு படம் பண்றதுக்கு தயாரிப்பாளர்கள் பயந்தாங்க. அந்த நேரத்துல எனக்கு படம் இல்ல. இயக்குநர் யாரும் என்கிட்ட வரல.
அப்போ மணி சார் ஆபிஸ்ல இருந்து கால் வந்தது. அப்போ அவர்கிட்ட போய் ‘உண்மையாகவே நீங்கதான் என்னைக் கூப்பிட்டீங்களா’னு கேட்டேன். அவர் ‘ நான்தான் கூப்பிட்டேன்’னு சொன்னாரு. என்னை வச்சு படம் பண்றதுக்கு நம்பிக்கையாகக் கூப்பிட்டீங்க. ரொம்பவே நன்றி சார்.
‘செக்கச் சிவந்த வானம்’ படம் மட்டும் கிடையாது. இன்னும் சில படங்களுக்கும் கூப்பிட்டு எனக்கு கதை சொல்லியிருக்காரு. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கும் என்னைக் கூப்பிட்டாரு. அப்போ சில காரணங்களால பண்ண முடியல.
‘தக் லைஃப்’ படத்துக்கு முதல்ல கூப்பிட்டாரு. கெட்டப்னால என்னால பண்ண முடியல. மறுபடியும் அந்த வாய்ப்பு கமல் சாரோட அமைந்தது. அவர் என்னோட காட் பாதர். குரு மாதிரி.
அப்போ கஷ்டப்படுத்துறாங்கனு நினைச்சேன்!
இந்த மேடையில என்னுடைய தந்தை டி.ராஜேந்திரனுக்கும், உஷா ராஜேந்திரனுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கித் தருவாங்க. வெளிய கூப்பிட்டு போவாங்க. ஆனா, சின்ன வயசுல இருந்து எனக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்தாங்க.
அப்போ ஒரு பக்கம் ஷூட்டிங் போயிட்டு இன்னொரு பக்கம் படிக்கிறதுக்கு கஷ்டமாக இருக்கும். நடிக்கிறதுக்கு சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். அப்போ நம்மை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துறாங்கனு நினைச்சிருக்கேன். ஆனா 40 வருஷம் கழிச்சி கமல் சாரோட சேர்ந்து நடிக்க ஒரு வாய்ப்பு வந்துருக்கு. அதற்காக என் பெற்றோருக்கு தான் நன்றி சொல்லனும்.
இந்த விழாவுக்கு அப்பா வரவேண்டாம். அவர் எமோஷனல் ஆகிடுவார்னு நினைச்சேன். ஆனா, நான் எமோஷனல் ஆகிட்டேன். சாரி!
நாங்க மிதிச்சி போகல… மதிச்சு போறோம்!
கமல் சார் பத்தி நிறைய விஷயங்கள் பேசிட்டே இருக்கலாம். கமல் சார இங்க நெறைய பேரு குருவா தான் பாக்குறோம். ஆனா அவரு நான் இன்னும் சினிமாவின் மாணவன்னு சொல்றாரு. திறமையான மாணவன்கிட்ட கத்துக்கிறதுல எனக்கு பிரச்னையே இல்ல. உங்ககிட்ட இருந்து அதையும் கத்துக்கிறோம்.
படத்துல ’நான்தான் இனிமேல் இங்க ரங்கராய சக்திவேல்’னு ஒரு வசனம் இருக்கு. அந்த வசனம் வந்ததுக்குப் பிறகு சோசியல் மீடியாவுல நான்தான் கமல் சாருக்கு அப்புறம்னு பேசுறாங்க. ‘தேவர்மகன்’ படத்துக்குப் பிறகு சிவாஜி சார் இடத்தை கமல் சார் பிடிச்சிட்டதாக கிடையாது. முதல்ல அதை நம்ம புரிஞ்சுக்கணும். சிவாஜி சார் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட். அவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது.
அதே மாதிரி நெட்டையா, குட்டையா, அழகா, அசிங்கா, கஷ்டப்பட்டு நாம நினைச்சு பார்க்க முடியாத கதாபாத்திரங்கள் கமல் சார் பண்ணியிருக்கார். அந்த இடம் நம்ம ஈஸியாக வந்திட முடியாது. அதுக்காக உழைக்கனும்.
கமல் சார் சமீபத்துல ‘இனிமேல் வர்றவங்க என்மேல் ஏறிப் போங்க. என் தோள்ல ஏறி நில்லுங்க, உங்களை நான் தூக்கி விடுறேன்’னு சொல்லியிருந்தாரு. கமல் சார் உங்களை நான் ஏணியாக தான் பார்க்கிறேன். உங்கள நாங்க மிதிச்சி போகல. மதிச்சுதான் போறோம். அடுத்த தலைமுறை இப்படி வரனும் என்ற உங்களின் ஒரு பெருந்தன்மை யாருக்கும் வராது. எனக்கு இந்த இடத்தைக் கொடுத்திருக்கீங்க. அதுக்காக உழைச்சு நான் இன்னும் மேல வருவேன்.
ரசிகர்கள்கிட்ட உங்களை பெருமைப்படுத்துற மாதிரி இனிமேல் நடந்துப்பேன்னு சொன்னேன். அதற்கான தொடக்கம் தான் ‘தக் லைஃப்’. கொஞ்சம் கால தாமதமாகிடுச்சு. இனி சரியாக படங்கள் வரும்.
எல்லோரும் என்னிடம், ‘எப்படி உங்களுக்கு இப்படி நேர்மையான ரசிகர்கள் இருக்காங்க?’னு கேட்பாங்க. 2 நல்லவங்க இருக்கிறதுனாலதான் இந்த உலகம் இயங்கிட்டு இருக்கு. அவங்க என் ரசிகர்களாகவும் இருக்காங்க. அப்படியான நல் உள்ளங்கள் எனக்கு ரசிகர்களாக அமைஞ்சதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
தக் லைஃப் படத்த பத்தி, நான் பேசல, ஜூன் 5ஆம் தேதி படமே உங்ககிட்ட பேசும்” என்று சிம்பு பேசினார்.