விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. simbu about 15years of vtv moive
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். காதல், ரொமான்ஸ் படமாக வெளியான இந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சிம்புவின் ஹிட் லிஸ்டில் இந்த படமும் சேர்ந்தது.
அதன்பின்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 3 ஆண்டுகளை கடந்தும் அதாவது 1000 நாட்களை கடந்தும் இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் நேற்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் குறித்து சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகரும், அந்தப் படத்தின் தயாரிப்பாளருமான விடிவி கணேஷுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “விண்ணைத்தாண்டி வருவாயா ரிலீசாகி 15 வருடம் ஆகிவிட்டது. முதல் தடவை ரிலீசான போதும், சூப்பர் ஹிட் கொடுத்தீர்கள். ரீ ரீலிஸ் ஆன பிறகும் ஆயிரம் நாட்களை கடந்து திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையிலேயே அந்தப் படம் ஒரு மேஜிக்கலான படம்தான்.
அதற்காக கெளதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், மனோஜ் பரமஹம்சா, த்ரிஷா உள்ளிட்ட படத்தின் டீம் எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறோம்” என்றார்.
கடைசியில் விடிவி கணேஷ் சிம்புவை பார்த்து. ‘இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா’ என கேட்க, அதற்கு சிம்பு, ‘இப்போலாம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லல; வேற சொல்லுது. அதை பிறகு சொல்கிறேன்’ என்று ஜாலியாக கூறி செல்கிறார்.
சிம்புவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
