முன்னாள் ஆளுநர் தமிழிசை கைது!

Published On:

| By vanangamudi

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்திய முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன், இன்று (மார்ச் 6) கைது செய்யப்பட்டார். signature campaign tamilisai arrest

தமிழக பாஜக சார்பில் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக ‘சமகல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நேற்று (மார்ச் 5) தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து சமக்கல்வி தொடர்பாக திருச்சி, திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம், சேலம் ,சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட எட்டு மண்டலங்களில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இன்று முதல் தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள்.

அந்தவகையில், சென்னை எம்ஜிஆர் நகரில் தமிழிசை செளந்தரராஜன், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக்காட்டி காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை, “நாங்கள் என்ன போராட்டமா நடத்துகிறோம். அமைதியான முறையில் தானே கையெழுத்து வாங்குகிறோம். இந்த ஏரியாவில் நான் நாற்பது வருடமாக இருக்கிறேன். என்னை சுற்றி இவ்வளவு போலீஸ் ஏன் நிற்கிறீர்கள். நான் என்ன தீவிரவாதியா? கையெழுத்து வாங்கிவிட்டு தான் இங்கிருந்து கலைந்துசெல்வோம்” என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து தமிழிசை உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால், தமிழிசை போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் தமிழிசை செளந்தரராஜனை அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று பெயிலில் அனுப்பலாமா? அல்லது எம்ஜிஆர் நகரிலேயே பெயிலில் அனுப்பலாமா? என்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share