கன்னியாகுமரியில் நடைபெறும் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் இந்த ஆண்டு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கலந்துகொள்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தை நடத்தி வருபவர் அருமனை ஸ்டீபன். 2021 கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோரை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விமர்சித்து பேசிய விவகாரத்தில், ஸ்டீபன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதுபோன்று 36 வயது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் அருமனை ஸ்டீபன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கிலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு விசிகவில் இணைந்தார்.
ஸ்டீபன் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, சமூக நல்லிணக்க மாநாடு நடத்தி வருகிறார். இதுவரை அருமனை கிறிஸ்தவ இயக்கம் 25 ஆண்டுகள் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியிருக்கிறது. 2023ஆம் ஆண்டு 26ஆம் ஆண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது.
இவர் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி வரை பல அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதுபோன்று முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரை பங்கேற்கச் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையாவை அழைத்துள்ளனர்.
இதற்காக கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜயவசந்த், கன்னியாகுமரியைச் சேர்ந்த கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி செல்லகுமார் ஆகியோர் மூலம் ஸ்டீபன் முயற்சி செய்தார். எம்.பி.க்கள் விஜயவசந்த்தும், செல்லகுமாரும் சித்தராமையாவை சந்தித்து பேசியுள்ளனர்.
அதன்படி இந்த ஆண்டு அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்துகொள்கிறார் என்ற தகவல் அறிந்து குமரி காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகியுள்ளனர். அவரது வருகையை ஒட்டி காங்கிரஸ் சார்பில் வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
