எல்லையில் தவிக்கும் யானை: தமிழக – கேரள வனத்துறை இணைந்து சிகிச்சை!

Published On:

| By Kalai

தமிழக – கேரள எல்லையில் உடல் நலக்குறைவால் சுற்றத்திரியும் ஒற்றை யானைக்கு சிகிச்சை அளிக்க இருமாநில வனத்துறையினரும் முன்வந்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி கேரளா மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது. இங்கு பட்டிசாலை என்ற இடத்தில்  தமிழக – கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது. 

நேற்று (ஆகஸ்ட் 15 ) மாலை முதல் யானை ஆற்றின் அருகே நின்று கொண்டு இருப்பதால் இதற்கு யார் சிகிச்சை அளிப்பது என்ற கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் உடனடியாக இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். வனத்துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். அவர்கள் யானைக்கு சிகிச்சை அளிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் யானையை காப்பாற்ற தமிழக வனத்துறையினர் முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் உடல் நலம் குன்றியிருக்கும் ஒற்றை யானைக்கு தமிழ்நாடு – கேரளா மாநில வனத்துறையினர் இணைந்து சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர். யானையின் உடல்நலத்தையும் இருமாநில வனத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர். யானைக்கு உரிய சிகிச்சை தர அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருக்கும் யானை அருகாமையில் யாராவது சென்றால் விரட்டி வருகிறது.

இதனால் சற்று தூரத்திலிருந்தே யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானை உடல் மெலிந்து காணப்படுவதனால் முதல் கட்டமாக பலாப்பழம், தென்னை குருத்து உள்ளிட்ட உணவுகளை தந்து யானையை வனத்துறை காத்து வருகின்றனர்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share