’தக் லைஃப்’ படம் குறித்த டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானபோதிருந்து ரசிகர்கள் கேட்கிற முதல் கேள்வி. ‘இதுல வர்ற விண்வெளி நாயகா பாடல் எப்போ வரும்’ என்பதுதான். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அதற்குப் பதில் சொல்லாமல் காலம் கடத்தி வந்தார். shruthihaasan and ar ameen joined thuglife
‘ஜிங்குச்சா’, ‘சுகர் பேபி’ சிங்கிள் வெளியாகி ரசிகர்களைப் பரவசப்படுத்திய சூழலில், அதற்குக் கொஞ்சமும் குறை வைக்காதவாறு ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘விண்வெளி நாயகா’ வெளிப்பட்டிருக்கிறது.
சென்னையில் நடந்த விழாவின்போது, இப்பாடலைப் பாடியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இப்பாடலின் பின்னணியில் இடம்பெறப்போவது கமல்ஹாசன் தான் என்பது நாம் அறிந்ததே.
கமல் தயாரித்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திற்கு இசையமைத்த ஸ்ருதி ஹாசன், அதில் மூன்று பாடல்களையும் பாடியிருந்தார். அப்படம் 2009இல் வெளியானது.
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவர் கமல் படத்தில் பாடியிருக்கிறார். இதற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ தனிப்பாடலை அவர் பாடியிருந்தார். அதன்பின்னர் ‘காதலிக்க நேரமில்லை’யில் வரும் ‘இட்ஸ் பிரேக் அப்டா’ பாடலில் அவரோடு இணைந்திருந்தார்.
ஆக, இந்த ஒன்றிணைவு சம்பந்தப்பட்ட கலைஞர்களின் ‘நாஸ்டால்ஜியா’வில் முதன்மையானவற்றின் ஒன்றாக இருக்கும்.
‘விண்வெளி நாயகா’ பாடலை ஸ்ருதி உடன் இணைந்து ஏ.ஆர்.அமீன் பாடியிருக்கிறார். ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டில் ‘இந்த படத்தில் தனக்குப் பிடித்த பாடல் இது’ என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டிருக்கிறாராம்.
‘விண்வெளி நாயகா’ இனி எப்படிப்பட்ட ஆரவாரத்தை, கொண்டாட்டத்தைப் பெறப் போகிறதோ தெரியவில்லை..?