அசுரன் ரீமேக்கில் ஸ்ரேயா?

Published On:

| By Balaji

அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஸ்ரேயாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனுஷ் நடித்த படங்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படமாக அசுரன் சாதனை புரிந்தது. பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படம் நில அபகரிப்பு, அடக்குமுறை, சாதி ரீதியிலான பாகுபாடு, அநீதி போன்ற பல்வேறு விவாதங்களை உருவாக்கியது.

ADVERTISEMENT

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தெலுங்கில் அசுரன் படம் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த பாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். தமிழில் நாயகியாக நடித்த மஞ்சு வாரியரின் நடிப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. இதனால் தெலுங்கில் இந்தப் பாத்திரத்தில் யார் நடிப்பார் எனக் கேள்விகள் எழுந்துவரும் நிலையில், ஸ்ரேயாவை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்க முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய படக்குழு, தற்போது ஸ்ரேயா இந்தப் பாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் எனப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. திருமணத்துக்குப் பின் தற்போது சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்திவரும் ஸ்ரேயா சரண், இந்தப் படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.டி.ஆர்: கதாநாயக்குடு என்ற தெலுங்கு படத்துக்குப் பின் ஸ்ரேயா வேறு எந்த தெலுங்குப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

ADVERTISEMENT

ஸ்ரேயா தமிழில் ஆர்.மாதேஷ் இயக்கும் ‘சண்டகாரி – தி பாஸ்’ படத்தில் விமல் ஜோடியாக நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெற்றிபெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தைத் தழுவி தமிழில் ‘சண்டகாரி – தி பாஸ்’ திரைப்படம் உருவாகிறது. அதைத் தொடர்ந்து, பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் இந்தியில் தட்கா என்ற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா.

அசுரன் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழில் அசுரன் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, தெலுங்கிலும் இணைந்து தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share