விமர்சனம் : ஷாட் பூட் த்ரி!

By Kavi

|

Published on 10 Oct 2023, 7:10 PM

இது வேறொரு உலகம்!

குழந்தைகளுக்கான படங்கள் என்றொரு வகைமையே இன்று இல்லாமல் போய்விட்டது. பெரியவர்களே திரையைப் பார்த்துக் கூசும் அளவுக்குப் படமெடுத்துவிட்டு, அதனைக் குழந்தைகளுக்கானது என்று சிலர் சொல்வதுண்டு. சில நேரங்களில் குழந்தைத்தனமாகச் சில படங்களை எடுத்துவிட்டு, அதனைக் குழந்தைகளுக்கான படங்கள் என்று சொல்வதும் நிகழ்வதுண்டு.

ADVERTISEMENT

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெங்கட்பிரபு, சினேகா, யோகிபாபு, ஷிவாங்கி, டெல்லி கணேஷ், அருண் வைத்தியநாதன், கவிதாலயா கிருஷ்ணன், ஷிவாங்கியோடு இணைந்து குழந்தைகள் கைலாஷ் ஹீத், பிரனிதி, வேதாந்த் வசந்த், பூவையார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘ஷாட் பூட் த்ரி’.

குழந்தைகளுக்கு நட்சத்திர அந்தஸ்து தரும் கதையைக் கொண்ட இப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது?

ADVERTISEMENT

மூவர் கூட்டணி!

தனியார் பள்ளியொன்றில் பயின்றுவரும் பல்லவி (பிரனிதி), பல்லு (வேதாந்த் வசந்த்) மற்றும் கைலாஷ் (கைலாஷ் ஹீத்) மூவரும் நெருங்கிய நண்பர்கள். அடையார் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இவர்களது குடும்பங்கள் வசிக்கின்றன.

ADVERTISEMENT

‘இதுதாண்டா ப்ரெண்ட்ஷிப்’ என்று சொல்லும் அளவுக்குத் தோளோடு தோள் சேர்த்து திரியும் இவர்கள் மூவருக்கும் நண்பனாக இருப்பவர் ரமணா (பூவையார்). திருவண்ணாமலையில் பலசரக்குக் கடை வைத்திருந்த அவரது தந்தை, தொழில் நஷ்டத்தால் தற்போது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணியாற்று வருகிறார்.

பொருளாதார இழப்பு காரணமாக, ரமணா பள்ளி செல்லாமல் இருக்கிறார். கைலாஷ், பல்லவி, பல்லுவின் பல ஆசைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பது அவர்தான்.

அந்த வகையில், கைலாஷின் நாய் வளர்க்கும் ஆசையை நிறைவேற்றி வைக்கிறார் ரமணா. அவ்வாறு வாங்கி வந்த நாய்க்கு ‘மேக்ஸ்’ என்று பெயரிடுகிறார் கைலாஷ்.

கைலாஷின் தந்தைக்கு (வெங்கட்பிரபு) மகன் நாய் வளர்ப்பதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால், அவரது தாய்க்கு (சினேகா) நாய் என்றாலே பிடிக்காது.

முதலில் மறுப்பு தெரிவிக்கும் கைலாஷின் தாய், பின்னர் மகனின் பிடிவாதத்தை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், நாயைக் கவனிக்கும் பொறுப்பைத் தந்தையும் மகனும் மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறார்.

Shot Boot Three Movie Review

ஓராண்டு காலத்தில், மேக்ஸ் நன்றாக வளர்ந்துவிடுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாள், தாங்கள் சார்ந்த கார்பரேட் நிறுவனம் தொடர்பான சமூகச்சேவை பணிக்காக கைலாஷின் பெற்றோர் வெளியூர் செல்கின்றனர். நாயைப் பராமரிப்பு மையத்தில் விடுவதற்குக் கைலாஷ் சம்மதிக்காத காரணத்தால், அவர் வீட்டில் தனியாக இருக்கச் சம்மதிக்கின்றனர்.

பல்லுவின் தாய் மூவருக்கும் வேளாவேளைக்கு உணவு கொடுக்கிறார். கைலாஷ் வீட்டில நாள் முழுவதும் மூவரும் சேர்ந்து விளையாடுவதுதான் அவர்களது திட்டம்.

அதனைத் தலைகீழாக்கும் வகையில், திடீரென்று மேக்ஸ் காணாமல் போகிறது. சிசிடிவி பதிவுகளில் அது குடியிருப்பு வளாகத்தை விட்டு வெளியேறியது தெளிவாகத் தெரிகிறது.

அதேநேரத்தில், மாநகராட்சிப் பணியாளர்கள் இருவர் தெருநாய்களைப் பிடித்துக் கொல்லும் முனைப்பில் இருக்கின்றனர். ஆட்டோ டிரைவர் குமார் (யோகிபாபு) தனது கடன் பிரச்சனையைச் சமாளித்து தீபாவளி கொண்டாடுவது எப்படி என்ற சிந்தனையில் இருக்கிறார்.

குமாருக்குக் கடன் கொடுத்த நபரோ (சாய் தீனா), சூதாட்டத்தில் பணத்தை இழந்து ’தனக்கு ராசி இல்லையே’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் மட்டுமல்ல, ரமணா உட்படக் குழந்தைகள் நால்வரையும் நான்குவிதமான பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன.

ஒரு பொறுப்பான சிறுவனாக கைலாஷ் இருப்பதில்லை என்பது அவரது பெற்றோரின் வருத்தம். படிப்பை விடப் பாட்டு பாடுவதில் பல்லவி ஆர்வம் காட்டுவதும், தைரியமான குணம் இல்லாமல் பல்லு தடுமாறுவதும் அவர்களது வீட்டில் பெரும் பிரச்சனைகளாக நோக்கப்படுகின்றன.

எதற்கும் எளிதாகத் தீர்வு காணும் புத்திசாலித்தனத்தைக் கொண்ட ரமணாவுக்கோ, பள்ளி செல்வது ஒரு கனவாக உள்ளது. காணாமல் போன மேக்ஸ் திரும்பக் கிடைக்கும்போது, அத்தனை பிரச்சனைகளும் சரியாகிவிடுகின்றன. அது எப்படி என்பதுதான் ‘ஷாட் பூட் த்ரி’யின் மீதிக் கதை.

குழந்தைகள் விளையாட்டை டைட்டிலாக வைத்தாலும், திரைக்கதை நகரும் விதம் சிறுபிள்ளைத்தனமாகக் கையாளப்படவில்லை. அதனால், வெகுஎளிதாக நாமும் குழந்தையாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. கதையில் கொட்டிக் கிடக்கும் லாஜிக் மீறல்களைக் கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்கக் கூடாது என்பதே அது நிகழ்வதற்கான ஒரேயொரு நிபந்தனை.

Shot Boot Three Movie Review

வேறொரு உலகம்!

ஆனந்த் ராகவ் உடன் இணைந்து ‘ஷாட் பூட் த்ரி’யின் திரைக்கதை வசனத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.

ரமணாவின் குடும்பம், கார்ப்பரேஷன் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டும் குமார் போன்றவர்கள் திரையில் வந்து போனாலும், உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்வதாக இத்திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இதில் இயக்குனர் காட்டியிருப்பது வேறொரு உலகம். ஆனால், அதனை நேர்த்தியாக, அபத்தமற்றதாக, சுவாரஸ்யமானதாகச் சொன்ன வகையில் நம்மை ஈர்க்கிறார் அருண் வைத்தியநாதன்.

இப்படத்தில் வரும் குழந்தைகளான கைலாஷ் ஹீத், பிரனிதி, வேதாந்த் வசந்த் மூவருமே நம்மை எளிதாக ஈர்க்கின்றனர். அவர்களது ப்ரெண்ட்ஷிப்பை காட்டும் இடங்கள் ரொம்பவே ‘லைவ்’வாக இருக்கின்றன. போலவே, அவர்களுக்கு இணையாகக் கைத்தட்டல்கள் பெறும் வகையில் பூவையாரின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நால்வரது நடிப்புதான் திரை உடன் நம்மை எளிதாக ஒன்ற வைக்கிறது.

வெங்கட்பிரபுவும் சினேகாவும் மிகச்சில நிமிடங்களே வந்தாலும், நம்மை எளிதாக வசப்படுத்தி விடுகின்றனர். யோகிபாபு, சாய் தீனா, ஷிவாங்கி, டெல்லி கணேஷ் போன்றோரின் நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக இருப்பது சிறப்பு.

காட்சிகளின் சூழலுக்கேற்ற வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுதர்சன் சீனிவாசன். அதிலும், படுக்கையில் நாய் உடன் இணைந்து கைலாஷ் ஆட்டம் போடுமிடத்தில் அவரது பணி அபாரமாக உள்ளது.

பரத் விக்ரமன் படத்தொகுப்பு, மிகச்சீராகக் கதை சொல்ல உதவியிருக்கிறது. பொதுவாக, இது போன்ற படங்களில் ‘வைபிங்’ போன்ற எடிட்டிங் எபெக்ட்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. அதனை அவர் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார்.

ஆறுசாமியின் கலை வடிவமைப்பு வெவ்வேறு களங்களை நம்பும்படியாகக் காட்ட முனைந்திருக்கிறது.

Shot Boot Three Movie Review

அருமையான இசையனுபவம்!

ராஜேஷ் வைத்யாவின் இசையமைப்பு, ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டமிக்கதாக மாற்றுவதில் பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறது. அதற்குத் தக்க பலனும் கிடைத்திருக்கிறது. இப்படத்தைக் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கத் துணை நிற்கிறது அந்த இசையனுபவம்.

பாடல்களைப் பொறுத்தவரை, ‘பால் மழையின் தூறலில்’ ஒரு அற்புதமான மெலடி. ’நீ இல்லாமல் நான் தவிப்பதா’ பாடல் எத்தகைய சோகச் சூழலுக்கும் பொருந்தக் கூடியது. ’ஷாட் பூட் த்ரி’ மற்றும் ’மைத்ரிம் பஜேத’ பாடல்கள் கூட எளிதாக நம் மனதுக்குள் புகுந்துவிடுகின்றன.

உண்மையைச் சொன்னால், இசைக்குத் தனியாக முக்கியத்துவம் தந்து விளம்பரப்படுத்தும் அளவுக்குப் பெரும்பங்கு வகிக்கிறது இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யாவின் பங்களிப்பு.

இந்த உலகில், நாய் போன்ற வீட்டு விலங்குகளை வளர்க்க ஆசைப்படும் குழந்தைகள் எண்ணிக்கை நிச்சயம் அதிகம். அந்தப் பருவத்தில், அவர்கள் தங்களது பொறுப்பையும் நேசத்தையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அது.

அதனை மையமாக வைத்து உலகம் முழுக்கப் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஒன்றாக இணைகிறது ‘ஷாட் பூட் த்ரி’. இப்படத்தில் சில மேற்கத்திய படங்களின் தாக்கத்தைச் சிலர் கண்டுபிடிக்கக் கூடும். மண் சார்ந்த விஷயங்கள் இல்லை என்றும் சிலருக்குக் குறைகள் தெரிய வரலாம். அவற்றை மீறி, இரண்டரை மணி நேரம் குழந்தைகளோடு சேர்ந்து சிரித்து மகிழத்தக்கதாக அமைந்திருக்கிறது இப்படம். அதுவே ‘ஷாட் பூட் த்ரி’யை எப்போது வேண்டுமானாலும் ரசிக்கலாம் என்ற நம்பிக்கையைப் பூதாகரமாக்குகிறது!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

காவிரியாக ஓடும் கள்ளச்சாராயம் : கண்டுக்கொள்ளுமா காவல்துறை?

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இந்தியாவின் நகை வர்த்தகத்தில் கடும் பாதிப்பு!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel

Comments are closed.