இ-பாஸ் நடைமுறையை கண்டித்து ஊட்டியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். Shops closed in Ooty
கோடை விடுமுறை வந்துவிட்ட நிலையில், ஊட்டிக்கு போகலாமா, கொடைக்கானலுக்கு போகலாமா என சுற்றுலா வாசிகள் திட்டமிட்டு வரும் நிலையில், புதிய கட்டுப்பாடு நேற்று அமலுக்கு வந்தது.
அதாவது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, வார நாட்களில் 6000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கும் வகையில் இ.பாஸ் விதிமுறையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதையறியாமல் நேற்று கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் வந்த வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
இந்த கட்டுப்பாடுகளால் கொடைக்கானல், ஊட்டியில் உள்ள ஹோட்டல்கள், கடைகளில் வியாபாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் ஏ.ஜே.தாமஸ் மற்றும் மாநில இணை செயலாளர் அப்துல் ரசாக்,
“நீலகிரி மாவட்டத்திற்கு வாகனங்களில் வர இ-பாஸ் நடைமுறை உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 2ம் தேதி 24 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.
மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்கள் என அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படும்.
ஆட்டோ, ஜீப், கார்,வேன் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களும் ஓடாது. இ பாஸ் நடைமுறை தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் ”என்று கூறினர்.
அதன்படி இன்று (ஏப்ரல் 2) நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் இன்று காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. நாளை காலை 6 மணி வரை போராட்டம் நடைபெறுகிறது.
வணிகர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நகரப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதில் பால் மற்றும் மருந்து கடைகள் பங்கேற்கவில்லை.
இந்த போராட்டத்தால் ஏற்கனவே ஊட்டி சென்றுள்ள சுற்றுலா பயணிகள் சிரமமடைந்துள்ளனர். குறிப்பாக உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால், உணவு தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஊட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் குவிந்து வருகின்றனர். Shops closed in Ooty