திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கோவில் கொடைவிழாவில் மனித தலைகளுடன் ஆட்டம் போட்ட சாமியாடிகள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Shocking Ritual in Tirunelveli
வீரவநல்லூர் அருகே உப்பூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஊர்க்காடு சுடலைமாட சுவாமி கோவிலில் ஜூன் 6-ந் தேதி கொடைவிழா எனும் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவின் ஒருபகுதியாக நள்ளிரவில் சாமக்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீப்பந்தங்களை ஏந்தியபடி வேட்டைக்கு சென்று திரும்பிய சாமியாடிகள், மயானத்துக்குள் நுழைந்து மனித உடல்களை தோண்டி தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகங்களையும் எடுத்து வந்து சாமியாட்டம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து வெள்ளாங்குளி கிராம நிர்வாக அலுவலர் உத்தண்டசாமி, வீரவநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் மண்ணில் புதைக்கப்பட்ட மனித உடல்களை தோண்டி எடுத்து நோய் பரப்பும் வகையிலும் மக்கள் முகம் சுளிக்கும் வகையிலும் சாமியாட்டம் போட்டதாக சாமியாடிகள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.