கோவையில் நண்பனை கொலை செய்து 2 மாதங்களுக்கு முன் கிணற்றில் வீசியதாக கடந்த சனிக்கிழமை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டு பேர் சரணடைந்த நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 8ந் தேதி நண்பனை கொலை செய்து கல்லைக்கட்டி கிணற்றில் வீசியதாக பாலமுருகன், மற்றும் முருக பெருமாள் ஆகிய இருவரும் போலீசில் சரணடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததால் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையில் உடல் வீசப்பட்ட கிணற்றுப்பகுதிக்கு சரணடைந்த இருவரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஜெயராமன் கொலை செய்யப்பட்டு 2 மாதங்கள் ஆனதால் உடல் எலும்பு கூடாக மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் ஜெயராமன் தலையில் அடித்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணயில் திருநெல்வேலியைச் சேர்ந்த நியூட்டன், பெனிட்டோ, பாலமுருகன், ஜெயராமன் ஆகிய நான்கு பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் பாலமுருகன் கோவையில் வசித்து வந்த நிலையில் மற்ற மூவரும் சென்னையில் வசித்து வந்தனர். நியூட்டன் காபி கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில் ஜெயராமன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி
இந்நிலையில் ஜெயராமன் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு பெனிட்டோ, நியூட்டன் உள்ளிட்ட சிலர் தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்று உதவி புரிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆட்டோ வாங்கிய ஜெயராமன் சரி வர ஆட்டோ தொழிலை தொடராமலும், முறையாக கடன் தொகையை கட்டாமலும் இருந்து வந்துள்ளர். இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஜெயராமனை சந்தித்து கடன் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
ஜெயராமன் மீது தாக்குதல்
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த பெனிடோ, நியூட்டன் இருவரும் ஜெயராமனை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் ஜெயராமன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் பால முருகனை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். அப்போது உடலை கோவை கொண்டு வரும் படி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஜெயராமன் உடலை கார் மூலம் கோவை எடுத்து வந்து மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்த கிணற்றில் வீசி உள்ளனர்.
இதற்கிடையில் ஜெயராமனின் உறவினர்கள் அவரை தேட தொடங்கியதால் அச்சமடைந்த பெனிடோ, நியூட்டன் இருவரும் பால முருகனிடம் உதவி கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பால முருகன் போலீசாரிடம் சரணடைய வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் முருக பெருமாள் இருவரும் காவல்நிலையத்தில் சரணடைந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் காவல் துறையினர் பெனிடோ, நியூட்டன், முருக பெருமாள், பாலமுருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தை மூடி மறைக்க காவல்துறையில் பணியாற்றும் சிலரும் உதவியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
