கட்டுரை 9. பொய் செய்திகளின் மூலம்
ஏழாவது வாரக் கடைசியில் எழுப்பப்பட்ட கேள்விகளில் விவாதிக்க இன்னும் சில மீதியிருக்கின்றன. அவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். முதலில் அந்தக் கேள்விகள்:
“…பொய் செய்தி என்பது மற்றுமொரு அன்றாட நுகர்வுப் பண்டமாகிவிட்டதை இது காட்டுகிறதா? அப்படியானால் இதற்குக் காரணம் நாம் அனைவருமா அல்லது ட்ரம்ப் போன்றவர்களா?”
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் பொய் செய்தி.
செப்டம்பர் மாதம் 2015ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் ஒரு ‘செய்தி’யை வெளியிட்டது. அந்த செய்தியின் சாரம் இதுதான். அன்றைய தலைமை அமைச்சர் டேவிட் கேமரூன், கல்லூரியில் சேர்ந்த புதிதில் நடைபெற்ற பார்ட்டியில், [பியர்ஸ் கெவஸ்டன்](http://www.prospectmagazine.co.uk/politics/david-cameron-lord-ashcroft-biography-what-is-the-piers-gaveston-society) என்ற கிளப்பில் உறுப்பினராக சேருவதற்காக இறந்த பன்றியின் தலையினுள் தனது ‘பிறப்பு உறுப்பினை’ செருகினார் என்பதே. இத்தகவலை உலகுக்குச் சொன்னது: ‘கால் மி டேவ்’ என்ற கேமரூனின் அதிகாரபூர்வமற்ற சரிதையின் இரு ஆசிரியர்களில் ஒருவரான சண்டே டைம்ஸின் (பின்னர் டெய்லி மெயில்) விருதுபெற்ற இதழியலாளர் [இசபல் ஓக்ஸ்ஷோட்](http://www.isabeloakeshott.com/).
[இந்த மாதிரி கிளப்புகள் – அகம்பாவம், திமிர், டெஸ்டோஸ்டெரான் நிறைந்த; அப்பா பணத்தை செலவழிக்கப் பிறந்த வெள்ளை இன பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சந்தித்துக்கொள்ளும் இடம். இந்த இடங்களிலிருந்தே அரசியல் நட்புகளும் தொடர்புகளும் கார்ப்பரேட் வளர்ச்சிகளும் தொடங்குகின்றன. ஆனால் அது தனிக்கதை.]
ஒரு கிளப்பில் உறுப்பினராக வேண்டும் என்பதற்காக ஒரு நாட்டின் தலைமை அமைச்சர் இறந்த பன்றியின் வாயில் தனது ‘உறுப்பினை’ செருகினார் என்ற செய்தி, பிரிட்டன் பத்திரிகைகளில் முதல் பக்கங்களில் அலறியது. ஸ்காட்லாந்து பிரதமர் நிக்கலா ஸ்டர்ஜன், ‘நாட்டு மக்களை தனது பொழுதுபோக்கால் பிரதமர் மகிழ்வித்திருக்கிறார்’ என்று பகிரங்கமாக கேலி பேசினார். ட்விட்டர் அதிர்ந்தது. பன்றியின் பெயரில் ஒருவர் ட்விட்டர் கணக்கு ஆரம்பித்து, ‘பாதிக்கப்பட்டவரின்’ குரலாகப் பேசினார்.
24 மணி நேரத்துக்குப் பின் சானல் 4-இல் இசபல் [பேட்டியளித்தார்](https://www.youtube.com/watch?v=rm_Bli5h0Ns). தான் சொன்ன அந்த மாபெரும் அவதூறு செய்திக்கு அவரிடம் சாட்சியம் இல்லை என்று சொன்னார். அந்த சரிதையின் மற்றொரு ஆசிரியர் லோர்ட் ஆஷ்க்ராஃப்ட் இதை உறுதிசெய்தார். இந்தச் செய்தி உண்மையென எங்களால் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் அதற்குப் பிறகு ஒன்று சொன்னார், அதுவே இங்கு முக்கியம்: ‘அது உண்மையா என்று கண்டுபிடிப்பது எங்கள் வேலையல்ல. அதைப் படிப்பவர்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்”
அதற்குள் சமூக வலைதளங்களில் டேவிட் கேமரூன் நார்நாராக கிழிக்கப்பட்டார். இடதுசாரி, தாராளவாதிகள் – இந்த வலதுசாரிகளே இப்படித்தான்! – என்று பாடத் தொடங்கினர். சிலர் மிக நாசூக்காக, மேட்டிமைத்தனத்துடன் ஒரு வலதுசாரி ஆணிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று புறந்தள்ளினர்.
ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றிய செவிவழி அவதூறு செய்தியை எழுதி வெளியிட்டது, பொறுப்பற்ற ஒரு தனிநபரல்ல; சண்டே டைம்ஸின் விருதுபெற்ற [இதழாளர்](http://www.pressawards.org.uk/page-view.php?pagename=Winners-2011). அது ஒரு அரசியல் சரிதையாக வெளிவந்த தளமும் மதிப்புமிக்கது. எதை வேண்டுமானாலும் எழுத வசதியுள்ள சமூக வலைதளத் தளத்தில் அது பதிவிடப்படவில்லை.
இந்த அவதூறால் பாதிக்கப்பட்டவர் ஒரு வலதுசாரி அரசியல்வாதி. இந்நிகழ்வின்போது ஒருசில வாரங்களுக்கு ஊதி அவல் தின்றவர்கள் இடதுசாரிகளே.
அடுத்ததாக ப்ரெக்ஸிட்.
ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற பரப்புரைக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட ஒரு முக்கியவாதம் : வாரம்தோறும் ஐரோப்பாவுக்கு பிரிட்டன் கட்டவேண்டிய கப்பத் தொகை 250 மில்லியன் பவுண்டு என்பதாகும். அதைச் செலுத்தினால்தான் ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் வியாபாரம் செய்துகொள்ள முடியும். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல்/பொருளாதார முடிவெடுப்புகளில் பங்கெடுக்க வேண்டுமானால் ஐக்கிய ராஜ்ஜியம் இந்தத் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இது மிகப்பெரிய மோசடி, நஷ்டம் என்று முன்வைக்கப்பட்ட பரப்புரைக்கு சாமானியர்களிடம் பலத்த ஆதரவு இருந்தது.
அது மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கும் இந்தப் பணத்தை அப்படியே இங்கிலாந்தில் செயல்படும் என்எச்எஸ் (NHS) என்றழைக்கப்படும் தேசிய நலச் சேவைக்கு (குடிமக்களின் பொது மருத்துவச் செலவுக்கு) செலவிட்டால் ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள குடிமக்களுடைய உடல்நலப் பிரச்னைகள் அனைத்தும் தீரும் என்ற பரப்புரையும் ஒரு காரணம். இப்போது, ஐக்கிய ராஜ்ஜியத்தில் அதிகளவில் இருக்கும் ஐரோப்பிய வந்தேறிகளும் திரும்பிப் போய்விடுவர். ஆக குறைந்த மக்கள் தொகை, சீரிய பொதுநலக் கொள்கை (மருத்துவப் பயன்கள்) என்பது ப்ரெக்ஸிட் அளிக்கும் உத்தரவாதம் என்று நைஜல் ஃபராஜ் தலைமையில், இன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் ஆகிய பலரும் பரப்புரை செய்தனர்.
ஆனால் ப்ரெக்ஸிட் வெற்றியடைந்த சில மணிநேரத்துக்குள்ளாக நைஜல் இந்தத் தகவல் தவறானது என்றும், 250 மில்லியன் பவுண்டுகள் தேசிய நலச் சேவைக்கு அனுப்புவது சாத்தியமல்ல என்றும் தொலைக்காட்சியில் [ஒப்புக்கொண்டார்](http://www.itv.com/goodmorningbritain/news/nigel-farage-labels-350m-nhs-promise-a-mistake). அதாவது, ப்ரெக்ஸிட்டின் வெற்றிக்கு ஆதாரமான வெற்றிப் பிரச்சாரம் தவறான தகவல் என எந்தவித தயக்கமுமில்லாமல் ஒப்புக் கொண்டார்.
மீண்டும் நம் நினைவுக்கு : இதை யாரோ ஒருவர் சமூக வலைதளத்தில் பரப்பியது அல்ல. ஒரு நாட்டின் பொறுப்பில் உள்ள சில அரசியல்வாதிகள். அவர்களில் ஒருவர் இப்போது ஐக்கிய ராஜ்ஜியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர். ஒரு வித்தியாசம் : இந்த பொய் செய்திப் பிரச்சாரத்தில் இம்முறை தோற்றுப்போனது இடதுசாரிகள்.
இந்த இரண்டு ‘உண்மை’ உதாரணங்களிலிருந்து தெரியவருவது : பொய் செய்திகள் இணையத்தில் மட்டுமே உருவாவது அல்ல. அது வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதாகும். அது ஏதோ வலதுசாரிகளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாட உரிமையளிக்கப்படவும் இல்லை.
பொய் செய்தி இன்றைய ஊடகத்தின் ஒரு கூறாகவும் தன்மையாகவும் உருவாகிவிட்டிருக்கிறது என்றால் மிகையல்ல. இதற்கான வேர் நம் ஊடகங்களில், அரசியலில், தினசரித்தன்மையாகவே மாறிவிட்டிருக்கிறது என்பதாகவே நான் பார்க்கிறேன், புரிந்துகொள்கிறேன்.
உலகமயமாக்கலில் பண்டமாகிய நமது நுகர்வுத்தன்மைகள், அதை பிரதிபலிக்கிற ஊடகங்களில் உள்ள காட்சி உருவகங்கள் (spectatorship) – குறிப்பாக, எல்லா செய்திகளையும் காட்சிப்பொருளாக எளிமைப்படுத்தி அவற்றில் சிறிதே எஞ்சியிருக்கும் சீரியதன்மையையும் பண்டமாக்குவது, குலைப்பது போன்றவையே, பொய் செய்திகளுக்கான வேர் என்று நான் புரிந்துகொள்கிறேன்.
பொய் செய்திகளுக்கும், ரியலிட்டி தொலைக்காட்சிகளுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. எங்கு ‘உண்மை’ முடிகிறது, எங்கு காட்சி தொடங்குகிறது என்ற மெல்லிய கோடு ரியலிட்டி தொலைக்காட்சிகளில் வெளியாகும் பொய் செய்திகளின் தீவிரத்தை மழுங்கடிக்கச் செய்கிறது.
ரியலிட்டி மற்றும் பொதுவாக ஊடகங்களில் வெளிப்படுகிற காட்சிப்படுத்துதலில் உள்ள மிகைத்தன்மை அல்லது மிகைப்படுத்தப்பட்ட உண்மை நிலை (hyper reality), மேற்குலகின் தினசரி வாழ்க்கையில் முற்றிலும் இணைந்த ஒரு அம்சமாக மாறிவிட்டிருக்கிறது.
ழான் பூத்ரியா (Jean Baudrillard) உருவாக்கிய கலாசார கோட்பாடான hyper reality – அதாவது ‘மிகைப்படுத்தப்பட்ட உண்மை நிலை’ (இது விளக்கமே, மொழிபெயர்ப்பல்ல) நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது என்றால் மிகையல்ல. இவற்றை இரண்டு நிகழ்வுகளின் மூலம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
பிரிட்டிஷ் ரியலிட்டி நிகழ்ச்சியான பாப் ஐடல் (Pop Idol) என்பதின் சீனப் பிரதியை பெய்ஜிங் 2005இல் முதன்முறையாக ஒளி/ஒலி பரப்பியது. இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீட்டில் பார்வையாளர்கள் தாங்கள் விரும்பியவர்களை மொபைல் ஃபோன் மூலமாக – காசு கொடுத்து – வாக்களித்து தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு என்பது நமக்குத் தெரிந்ததே. அதுவரை பொதுத் தேர்தலில் பன்முறைப் போட்டியுள்ள வாக்களிக்காத ஒரு பெரும் சீனத் தலைமுறை முதன்முதலாக வாக்களிக்க இந்த ரியலிட்டி தொலைக்காட்சி வாய்ப்பளித்தது.
‘சூப்பர் கேர்ள்’ என்றழைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியே நவீன சீனாவில் நடைபெற்ற முதல் ஜனநாயகத் தேர்தல். ‘சூப்பர் கேர்ள்’ நிகழ்ச்சி சீனர்களுக்கு, தங்கள் அரசின் கட்டுப்பாட்டை மீறி, தாங்கள் விரும்பியவர்களை மொபைல் வாக்களிப்பின் மூலம் (நுகர்வு!) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கும் என்பதை சீன அரசு சிறிதும்கூட எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அனுமதித்து வந்தது. அவ்வப்போது சீன அரசு அதிகாரிகள் இந்நிகழ்ச்சி ஒரு விஷம் அது [சீன மக்களைக் கொல்லுகிறது என்றெல்லாம் சொல்லி வந்தனர்](http://www.mediaite.com/tv/communist-censors-kill-chinese-version-of-american-idol-because-of-western-style-voting/).
2011 வாக்கில் இந்த நிகழ்ச்சி மக்களிடம் மகத்தான ஆதரவைப் பெற்றது. கிட்டத்தட்ட 40 கோடி பேர் இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். செப்டம்பர் 2011இல், சூப்பர் கேர்ள் போட்டியின் இறுதிச்சுற்றின் போது அந்நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டது. பார்வையாளர்களை சூப்பர் கேர்ள் வாக்களிக்கத் தூண்டுவதே நிகழ்ச்சியை நிறுத்துவதற்கான உண்மையான காரணம் என [கூறப்பட்டது](http://harvardpolitics.com/world/chinese-show-super-girls-cancelled)
[பாப் ஐடலா? ஜனநாயக ஐடலா? என்று பெய்ஜிங் டுடே தலையங்கம் எழுதியது](http://www.economist.com/node/4382469). இந்த உதாரணம் தாராளவாதிகளுக்கு, சுதந்திரவாத ஆர்வலர்களுக்கு சிறிய மகிழ்ச்சியையும் நம்பிக்கை ஊற்றையும் ஏற்படுத்தலாம். சற்றுப் பொறுக்கவும்.
இப்போது பூத்ரியா, தனது கட்டுரைகளில் குறிப்பிட்ட மற்றொரு பிரசித்திபெற்ற உதாரணத்துக்கு வருவோம். 1990இல் இராக், குவைத் நாட்டை ஆக்கிரமித்தபோது புஷ் சீனியர் தலைமையில் அமெரிக்கா கல்ஃப் வளைகுடாவில் போர் தொடுத்தது. நவீன வரலாற்றில் ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட முதல் போர் இதுவாகும். தங்கள் வீட்டின் வரவேற்பறையில் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இரவுச் சாப்பாட்டை உண்டவண்ணம் – அமெரிக்கர்களும் மற்றவர்களும் – சுதந்திர அமெரிக்கப் படையால் இராக்கிய ஆக்கிரமிப்பாளர்கள், எவ்வாறு வென்றெடுக்கப்படுகிறார்கள் என்று கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டவை உண்மையான காட்சிகளா? அல்லது அமெரிக்க அரசும் பெண்டகனும் தெரிவுசெய்த காட்சிகள் மட்டுமே தொலைக்காட்சிகளில் உருவகப்படுத்தப்பட்டதா?
இந்தக் கேள்விகளை பூத்ரியா, தனது ‘கல்ஃப் போர் நடக்கவில்லை’ (The Gulf War Did Not Take Place) என்ற மூன்று சிறிய பத்திரிகைக் கட்டுரைகளின் மூலம் விளக்கினார். பின்னாளில் சிறிய [புத்தகமாக](http://halliejones.com/wp-content/uploads/2014/11/Baudrillard-The-Gulf-War-did-not-Take-Place.pdf) வந்த இந்தக் கட்டுரைகள், போர் நடக்கவில்லை என்றெல்லாம் தடாலடியாக ‘பொய்’ சொல்லவில்லை.
பூத்ரியா சொல்லவருவது இதுதான் : தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கல்ஃப் போர்க் காட்சிகள் ஊடகங்களாலும் அதன்பின் இருக்கும் அரசியலாலும் தொழில்நுட்பத்தின் உதவியோடும் கட்டமைக்கப்பட்டது என்பதே.
அதிகாரத்தில் உள்ளவர்களாலும் ஊடகங்களாலும் போர்க் காட்சிகள் தெரிவு செய்யப்பட்டு அக்காட்சிகளின்மேல் ஊடக வர்ணனைகள் மிகக் கவனமாக ஒட்டப்பட்டன. மற்றொரு விஷயம் : இரவுநேரத் தாக்குதல் காட்சிகள் மட்டுமே அதிகமாக ஒளிபரப்பப்பட்டன. பகல்நேர ஒளிபரப்புகள் ரத்தக் களறியாக இருக்கும் என்பதால் பெண்டகன் இந்த முடிவெடுத்தது. அதுமட்டுமல்ல; இரவு ஏவுகணைகள் வானில் ஒளிர்ந்து மேலேசென்று பிறகு, சீறி எதிரிகளை அழிப்பது கிட்டத்தட்ட ஹாலிவுட் போர்ப்படங்களில் அமெரிக்க சுதந்திரவாதத்தின் வெற்றிபோல தொலைக்காட்சிகளில் உருவகப்படுத்தப்பட்டது. ஆக, நாம் பார்த்த கல்ஃப் போர் என்பதே தொலைக்காட்சிகளில் ஒரு பண்டமாக உருவகப்படுத்தப்பட்டது என்கிறார் பூத்ரியா.
சுருக்கமாகச் சொன்னால் இரவு நேர வரவேற்பறைகளில் செய்தியாக காட்சிப்படுத்தப்பட்ட கல்ஃப் போர், கிட்டத்தட்ட ஒரு விடியோ கேம்ஸின் நேர்த்தியுடன் இருந்தது என்று சொல்லலாம். இந்த நுகர்வுத்தன்மையும் அரசியல் நோக்கங்களுமே பொய்ச் செய்திகளின் ஆதார வேர்கள். எனவே பொய் செய்திகளை இணையத்தின் விளைவுகள் என்று எளிமைப்படுத்துவது சரியல்ல.
அப்படியானால் இணையத்தின் பங்குதான் என்ன? நிறையவே உள்ளது.
அவற்றைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – முரளி சண்முகவேலன்
கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)
கட்டுரை 6 : மெய்யறு சமுதாயம் – ஒளிரும் இந்தியா
கட்டுரை 7: பொய்ச் செய்தி + தகவல் பேதி = வலதுசாரிகளின் எழுச்சி?
கட்டுரை 8: நிபுணர்களின் கல்லறைகளின் மீது பொய் செய்திகள் என்னும் சிலுவை