மகாராஷ்டிரா மாநிலம் சித்துர்க் மாவட்டத்தில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு திறந்துவைத்த மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர பிரம்மாண்ட சிலை இன்று (ஆகஸ்ட் 26) இடிந்து விழுந்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி கடற்படை தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநில சித்துர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர பிரம்மாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
இந்த சிலையானது இன்று மதியம் 1 மணியளவில் சுக்குநூறாக இடிந்து விழுந்தது. இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக சித்துர்க் மாவட்டத்தில் கனமழை மற்றும் புயல் காற்று வீசுவதால், சிலை இடிந்து விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் கூறும்போது, “இந்த சம்பவம் குறித்த முழுமையான விவரம் தெரியவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் ரவீந்திர சவான் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார். சிலை சேதமடைந்த அதே இடத்தில் புதிய சிலை அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சிலை இடிந்து விழுந்தது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார் பிரிவு) கட்சியின் செயல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே,
“நினைவுச்சின்னம் அல்லது கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கும் போது, அந்தப் பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால், சத்ரபதி சிவாஜியின் சிலை ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது அவரை அவமதிக்கும் செயலாகும். எனவே இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
முதல்வர் ஷிண்டேவுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரருக்கு இந்த பணிகள் டெண்டர் விடப்பட்டதாக தெரிகிறது. எனவே வரும்காலங்களில் அனைத்து விதமான பணிகளிலும் இருந்து இந்த நபரின் நிறுவனத்தை பிளாக்லிஸ்டில் வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“வாக்குக்காக அண்ணாமலை இப்படி பேசுகிறார்”: முத்தரசன் காட்டம்!
சுங்கச் சாவடி கட்டண உயர்வு… மத்திய அரசுக்கு அன்புமணி, டிடிவி கண்டனம்!