மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்லி.
துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத், கல்பனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் பாரட்டுகளைப் பெற்றது. வித்தியாசமான திரைக்கதையில் இதுவரை மலையாள சினிமா பார்த்திராத ஒரு திரைப்படமாக சார்லி அமைந்தது. அத்துடன் தேர்ந்த நடிப்பிற்காக படத்தில் நடித்த நடிகர்களும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றனர்.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படம் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை திலீப் குமார் இயக்குகிறார். ‘மாரா’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இறுதிச்சுற்று திரைப்படத்தில் மாதவனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் மாரா திரைப்படமும் அவரது திரைவாழ்க்கையில் முக்கிய திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இந்த நிலையில் நெடுஞ்சாலை திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஷிவதா மாரா திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலை படத்தைத் தொடர்ந்து ஜீரோ, அதே கண்கள் போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
மேலும் ‘அலெக்ஸ் இன் வண்டர்லேண்ட்’ என்னும் நிகழ்ச்சி மூலம் இணையதளத்தில் அதிகம் பேசப்பட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன் அலெக்சாண்டரும் இந்தப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த செய்திகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரமோத் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.
