ஷிகர் தவான். தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் கூட, ஐபிஎல் போட்டிகளின்போது மட்டுமே இவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். Shikhar Dhawan with Jacqueline
இதுதான் தற்போதைய நிலைமை. ஆனால், ஒருகாலத்தில் மனிதர் மைதானத்திற்குள் நுழைந்தாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். ‘இன்னொரு சேவாக்’ என்று சொல்கிற அளவுக்குத் தனது ஆட்டத்திறமையால் வசீகரித்தவர். மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடியைக் காட்டியவர்.
யார் கண் பட்டதோ, சட்டென்று ‘பார்ம்’ அவுட் ஆகி ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களை ஏமாற்றினார். இந்திய அணிக்காகத் தேர்வாகாத போதும், ஐபிஎல் வழியே அவ்வப்போது கவனம் ஈர்த்து வந்தார். கடந்த மூன்றாண்டுகளாக பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தவர், இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.
ஆனாலும், ரசிகர்களை ஈர்க்கிற விதமாக ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் ஷிகர். வேறொன்றுமில்லை, ஒரு மியூசிக் வீடியோவில் ‘தலை’ காட்டியிருக்கிறார். ’அப்படியானால் அவர் டான்ஸ் ஆடவில்லையா’ என்று கேட்கக்கூடாது. ’பெஸோஸ்’ எனும் அப்பாடலை ஒருமுறை பார்த்தாலே உங்களுக்கு பதில் தெரிந்துவிடும்.
இந்த பாடலில் நடனம் ஆடியிருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். ’காவாலா பாட்டு தான் இதுக்கு இன்ஸ்பிரேஷனா’ என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது இந்தப் பாடலில் அவரது நடன அசைவுகள்.
தெலுங்கு, தமிழ் படங்களில் வருகிற ‘சீனியர் ஹீரோக்கள்’ போல ஷிகர் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு நடந்துவர, அவரை வலம் வந்து ஆடித் தள்ளியிருக்கிறார் ஜாக்குலின். ’இதன் மூலமாக, மேலும் சில படங்களில் என்னைப் பார்க்க முடியும்’ என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார். Shikhar Dhawan with Jacqueline
ரஜத் நாக்பால், ப்ரீபாட், கார்ல் வைன் இசையமைத்திருக்கும் இப்பாடலை கார்ல் வைன் உடன் இணைந்து பாடியிருக்கிறார் ஷ்ரேயா கோஷல். இப்போதுவரை கிட்டத்தட்ட நான்கரை கோடி முறை இப்பாடல் கண்டு ரசிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், ‘எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறியதைக் கண்டிக்கிறோம்’ என்று சமூகவலைதளத்தில் குரல் கொடுத்திருக்கிறார் ஷிகர் தவான். இதன் மூலம் அவரைப் பற்றிய தேடலுக்கு வழி வகுத்திருக்கிறார். Shikhar Dhawan with Jacqueline
போகிற போக்கைப் பார்த்தால், ‘பெஸோஸ்’ இன்னும் சில கோடி பார்வைகளை அள்ளும் போல..!