அரிய ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனியின் உடல் மதுரையில் இன்று (மார்ச் 26) நல்லடக்கம் செய்யப்பட்டது. Shihan Hussaini’s body laid to rest at madurai
கே.பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. தொடர்ந்து ரஜினிகாந்த், கார்த்திக், சரத்குமார் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார்.
மேலும் சிறந்த கராத்தே பயிற்சியாளரான அவர், அரிய ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை தரமணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மரணத்துடன் போராடிய ஷிஹான் ஹுசைனி, நேற்று அதிகாலை 1.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஹுசைனியின் உடல் அடையாறில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு இன்று காலை ஆம்பூலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே இருக்கக்கூடிய காஜிமார் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் ஹூசைனியின் உடல் வைக்கப்பட்டது.
இன்று காலை முதல் ஏராளாமான கராத்தே, வில்வித்தை வீரர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அங்கு வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து காஜிமார் பள்ளிவாசலுக்கு உறவினர்களால் சுமந்து செல்லப்பட்ட ஹுசைனி உடலானது, இஸ்லாமிய மத முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது.