பக்தியை வைத்து பகை வளர்க்கக்கூடாது. சமாதானம் என்பதுதான் இறைக் கொள்கை. சனாதனம் என்பதல்ல இறைக் கொள்கை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (டிசம்பர் 6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பக்தியை வைத்து பகை வளர்க்கக்கூடாது. சமாதானம் என்பதுதான் இறைக் கொள்கை. சனாதனம் என்பதல்ல இறைக் கொள்கை. வடக்கிலே இதுபோன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி அரசியல் மாற்றத்தை உருவாக்கியது போல் தமிழகத்திலும் உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது ராமானுஜர் வாழ்ந்த மண் எல்லோருக்கும் எல்லாமும் ஆன மண்.
ஒரு காலத்தில் வல்லபாய் பட்டேலை இந்தியாவின் இரும்பு மனிதன் என்று போற்றுவார்கள். இன்று இந்தியாவே உற்று நோக்குகிற இரும்பு மனிதராக தமிழக முதல்வர் இருக்கிறார். அவருடைய ஆட்சியில் பிரிவினை என்பது எந்நாளும் எடுபடாது. பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். முதல்வரின் கொள்கை எல்லோருக்கும் எல்லாமான அரசு. எந்தெந்த மதத்தினர் அவரவருடைய வழிபாட்டை எப்படி எல்லாம் விரும்புகிறார்களோ அமைதியான சூழலில் கட்டுப்பாடோடு வழிபடலாம். ஒழுக்க நெறி தர தவறாமல் பாதுகாப்பையும் போதிய அமைதியையும் ஏற்படுத்துவதே இந்த ஆட்சியின் கொள்கை லட்சியம்.
இந்த விவகாரத்தில் பாஜக இரு மதங்களுக்கு இடையே மோதலை உண்டாக்க வேண்டும் என நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. எப்படி மஞ்சள் காமாலை கண்கள் கொண்டவர்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் தோன்றுமோ அதுபோல்தான் இந்த ஆட்சியின் மீது குறை கூறுபவர்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை அதை நடக்க விடாமல் சக்கர வியூகத்தை உருவாக்கினார் முதல்வர் என்றார்.
திருவண்ணாமலை மலையின் உச்சியில் தீபம் ஏற்றிய பின், மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு? 350 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் மலையின் உச்சத்தில் தீபம் ஏற்றுகிறார்கள்.
அதற்குப் பதிலாக வேறு ஐந்து இடத்தில் தீபம் ஏற்றினால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அது போன்றதுதான் திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது என்றார்.
அதிமுகவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதிமுக அப்போது சுய சிந்தனையோடு முடிவெடுத்தது. ஆனால் இப்போது, அமித் ஷா என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டுத்தான் நடக்கிறது” என்றார்.
2014 இல் வழங்கப்பட்ட தீர்ப்பையே இறுதி தீர்ப்பாக எடுத்து அரசு தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்விக்கு, “சட்டத்திற்கு அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளது. இறுதிவரை அரசு மத மோதலைத் தடுக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்” என்றார்.
இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு,அது குறித்து அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார்.
மேலும் மத மோதல்களை ஏற்படுத்த நீதிபதிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இது குறித்துப் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார்
